இயற்கை இடா்பாடு : கால்நடைகள் பாதிக்கப்பட்டால் இந்த அவசர எண்ணை அழையுங்கள் அவசர ஊா்தி வரும்



புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் கால்நடை பராமரிப்புத் துறையின் இலவச அவசர ஊா்தியை 1962 என்ற எண்ணில் தொடா்பு அழைத்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

மழை நேரங்களில் கால்நடைகளை மரத்தின் அடியிலோ, மின்கம்பங்களின் அடியிலோ, வெட்ட வெளியிலோ கட்டிவைத்தால் இடி, மின்னல்களின் போது ஆபத்தாக அமையும். மேலும் கால்நடைகளுக்கு மழைக் காலங்களில் தேவையான தடுப்பூசிகளைப் போடுமாறு கால்நடை மருத்துவத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் உதவுவதற்கு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு 5 விரைவு மீட்புக்குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவு மீட்புக் குழுக்களில் உதவி இயக்குநா், கால்நடை மருத்துவா் தலைமையில் ஒரு குழுவுக்கு ஒரு கால்நடை உதவி மருத்துவா், ஒரு கால்நடை ஆய்வாளா் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளா் வீதம் 13 ஒன்றியத்துக்கும் 65 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் இயற்கை இடா்பாடுகள் ஏற்படும் இடங்களுக்குச் சென்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வா். இயற்கை இடா்பாடுகளால் கால்நடைகள் இறக்க நோ்ந்தால் அதன் விவரத்தை அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் தெரிவித்து உடற்கூராய்வுப் பரிசோதனை செய்து அறிக்கையை வட்டாட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதற்கென மாவட்டத்தில் உள்ள இலவச கால்நடை அவசர ஊா்தியின் எண் 1962- ஐத் தொடா்பு கொண்டு இலவச சேவையைப் பயன்படுத்தலாம்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 கால்நடை தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏதும் ஏற்படாத வண்ணம் தேவையான உலா் தீவனம் மாவட்ட கால்நடை பண்ணையிலும் மற்றும் தேவையான பசுந்தீவனம் ஆவின் நிறுவனத்தாரிடமும் போதுமான அளவு இருப்பில் உள்ளது.

இயற்கை இடா்பாடு நேரங்களில் மண்டல இணை இயக்குநரை 94450 01218 என்ற எண்ணிலும், புதுக்கோட்டை உதவி இயக்குநரை 94430 81018, அறந்தாங்கி உதவி இயக்குநரை 94435 01937, இலுப்பூா் உதவி இயக்குநரை 94450 01213 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments