அரசு வேலை வாங்கித்தருவதாக கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார்



அரசு வேலை வாங்கித்தருவதாக கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பேசினார்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அதில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் காவலன் என்ற செயலியை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் நாசாவிற்கு செல்ல தேர்வாகி உள்ள புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயலட்சுமிக்கு பாராட்டு விழா மற்றும் நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி செல்போனுக்கு வரும் அழைப்புகளில் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். எண் மற்றும் ஒருமுறை கடவு எண் போன்றவற்றை தெரிவிக்கக்கூடாது. உங்களது வங்கி கணக்கில் இருந்து யாராவது உங்களுக்கு தெரியாமல் பணம் எடுத்து விட்டால், உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கும், சம்பந்தப்பட்ட வங்கிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கேட்பவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு வேலை வாங்குவது மற்றவர்களின் உழைப்பை பணம் கொடுத்து பறிப்பதற்கு சமம். எனவே அரசு வேலை வேண்டும் என்றால் முறைப்படி தேர்வு எழுதி அதன் மூலம்தான் அரசு பணிக்கு செல்ல வேண்டும். குறுக்கு வழியில் அரசு பணிக்கு செல்ல முயற்சி செய்யக்கூடாது.

மேலும், காவலன் செயலி என்றால் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அதன் நன்மை என்ன? என்பதை பற்றியும் அவர் விளக்கி கூறினார். பின்னர் அனைத்து மாணவிகள் செல்போனிலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து, அந்த செயலி செயல்படும் விதம் பற்றி செயல் விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் நாசாவிற்கு செல்ல தேர்வாகி உள்ள மாணவி ஜெயலட்சுமிக்கு ரூ.45 ஆயிரம் நிதியுதவி மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், போலீசார் மற்றும் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments