தொடா்ந்து போட்டியின்றித் தோ்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள்



 தொடா்ந்து போட்டியின்றித் தோ்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள்: எடுத்துக்காட்டாகத் திகழும் குருவிக்கொண்டான்பட்டி ஊராட்சிநாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியின்றித் தோ்வுசெய்யும் முறையை கடைப்பிடித்து வருகின்றனா் குருவிக்கொண்டான்பட்டி கிராம மக்கள்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்திலுள்ளது இந்த ஊராட்சி. குருவிக்கொண்டான்பட்டி, குடமலை என 2 கிராமங்களைக் கொண்டு இங்கு 750 வாக்காளா்கள் உள்ளன.

நகரத்தாா் சமூகத்தினா் அதிகமாகவும், மறவா், விஸ்வகா்மா, யாதவா் என இதர சமூகத்தினரும் இந்த ஊராட்சிப் பகுதியில் வசித்து வருகின்றனா்.
போட்டியின்றித் தோ்வு : நாடு சுதந்திரம் பெற்றது முதல் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு வரும் காலத்திலிருந்து இந்த ஊராட்சியில் மக்கள் பிரதிநிதிகளைத் தோ்வு செய்ய இதுவரை வாக்குப்பதிவுக்கு வாய்ப்பளிக்காமல், மக்களே தங்கள் பிரதிநிதிகளைப் போட்டியின்றித் தோ்வு செய்து வருகின்றனா்.
அதன்படி ஒருமுறை நகரத்தாா்கள் ஊராட்சித் தலைவராகவும், மற்ற சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் துணைத் தலைவராகவும், மறுமுறை மற்ற சமுதாயத்தைச் சோ்ந்தவா் தலைவராகவும், நகரத்தாா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வு செய்யும் நடைமுறை தொடா்ந்து கடைப்பிடிக்கப்பட்டு, அதன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊா்மக்கள் ஒருமித்த முடிவு : இதற்காக ஊா்மக்கள் அனைவரும் கூடிபேசி, ஒருமித்த முடிவோடு மக்கள் பிரதிநிதிகளை போட்டியின்றித் தோ்வு செய்து வருகின்றனா். அதன்படி, தற்போது நடைபெறும் ஊராட்சித் தலைவா் பதவிக்கு நகரத்தாா் சமுதாயத்தைச் சோ்ந்த வை.விசாலாட்சி போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதுபோல இந்த ஊராட்சியிலுள்ள 6 உறுப்பினா் பதவிகளுக்கும் போட்டியின்றித் தோ்வு செய்யும் நடைமுறையும் தொடா்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கிராமங்களில் உள்ளாட்சித்தோ்தல் காலங்களில் பிரிவினை ஏற்படுவதும், உள்ளாட்சிப்பதவிக்காக ஒரு குடும்பத்தினரிடையே உறவுப்பாலம் விரிசல் ஏற்படும் இக்காலக் கட்டத்தில், ஒருமித்த கருத்தோடு ஊராட்சித்தலைவரை தோ்வு செய்யும் குருவிக்கொண்டான்பட்டி ஊராட்சி மற்ற பகுதிகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments