உண்மையான ‘இந்து’ குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்கமாட்டான்: கொதிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்!



குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாகிஸ்தானின் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு சமமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாகிஸ்தான் இந்து சமூகம் ஒருமனதாக நிராகரிப்பதாக அந்நாட்டின் இந்து கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு அந்த மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எதிர்க்கும் பாகிஸ்தான் இந்துக்கள்:

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கும், இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு சமமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாகிஸ்தான் இந்து சமூகம் ஒருமனதாக நிராகரிப்பதாக அந்நாட்டின் இந்து கவுன்சில் தலைவர் ராஜா அசார் மங்கலானி தெரிவித்துள்ளார்.

“உண்மையான ‘இந்து’ இந்த சட்டத்தை ஆதரிக்க மாட்டான். பாகிஸ்தானின் ஒட்டுமொத்த இந்து சமூகத்திலிருந்தும் இந்திய பிரதமருக்கு ஒருமனதாக சொல்லப்படும் செய்தி இதுதான்” எனவும் ராஜா அசார் மங்கலானி தெரிவித்துள்ளார்.

அதேபோல், பாகிஸ்தானில் வாழும் சீக்கிய சமூகமும் சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சீக்கியர்கள் மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகின் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினரும் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக பாபா குருனாநக் குருத்வாராவின் தலைவர் கோபால் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சீக்கிய சமூகம் சிறுபான்மையினர்தான். சிறுபான்மையினத்தை சேர்ந்தவனான தன்னால் இந்தியாவின் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வலியையும், அச்சத்தையும் உணர முடியும். இது துன்புறுத்தக் கூடிய விஷயம் என கோபால் சிங் குறிப்பிடுகிறார். அத்துடன், சிறுபான்மையினர் மீது வெளிவர முடியாத கடினமான அழுத்ததை திணிக்க வேண்டாம் எனவும் பிரதமர் மோடியை கோபால் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அமித்ஷா சொன்னதுக்கு நேர்-எதிரான புள்ளி விவரங்கள்:

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசிய போது, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் மக்கள் தொகை பாகிஸ்தானில் கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவீதமாக இருந்தது. அது தற்போது 3.7 சதவீதமாக உள்ளது. அப்படியென்றால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது இடம் பெயர்ந்திருக்கலாம் என தெரிவித்தார்.

ஆனால், பாகிஸ்தான் தரவுகள் வேறு மாதிரியாக உள்ளன. பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்கு பாகிஸ்தானில் (தற்போது பாகிஸ்தான்) சிறுபான்மையினர் மக்கள் தொகை 23 சதவீதமாக எப்போதும் இருந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 1961ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினரின் மக்கள் தொகை 2.83 சதவீதமாகவும், 1972ஆம் ஆண்டு அது 3.25 சதவீதமாகவும் உள்ளது. இது 0.42 சதவீத உயர்வாகும். அதேபோல், 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிறுபான்மையினரின் மக்கள் தொகை 3.30 சதவீதமாகவும், 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 3.70 சதவீதமாகவும் சிறுபான்மையினரின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையான 210 மில்லியனில் 4 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். அதாவது பாகிஸ்தான் சிறுபான்மையினரில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments