மணமேல்குடி அருகே கோடியக்கரையில் கடலில் மூழ்கி தொழிலாளி பலி.!மணமேல்குடி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை, இறந்த உறவினர் ஒருவருக்கு 16-ம் நாள் காரியம் செய்வதற்காக, உறவினர்களுடன் சேர்ந்து மணமேல்குடி கோடியக்கரை கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு காரியம் முடிந்த பின்னர், கடலில் சந்திரன் குளித்து கொண்டிருந்தார்.


அப்போது அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட சந்திரன், காப்பாற்றுமாறு அபாயகுரல் எழுப்பினார். அங்கிருந்த உறவினர்கள், சந்திரனை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில் சந்திரன் கடலில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் ரோந்து படகில் கடலுக்குள் சென்று சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆழமான பகுதிக்கு செல்லக்கூடாது

மணமேல்குடி கோடியக்கரையில் உள்ள கடற்கரை பகுதிக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடியக்கரை கடல் பகுதியில் நீரோட்டம் ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்படுகிறது. இதனை அறியாமல் சிலர் ஆழமான பகுதியில் குளித்து, ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே கோடியக்கரை கடல் பகுதிக்கு வருகிற பொதுமக்கள் கடல் பகுதியில் கரையோரமாக குளிக்க வேண்டும். ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க கூடாது. மேலும் உதவி தேவைப்பட்டால், மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments