பயிர்களை பாதுகாக்க வயலில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்



பயிர்களை பாதுகாக்க வயலில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இத்தருணத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாக்க வயலில் தேங்கிய நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும். அதிக நாட்கள் வயலில் நீர் தேங்கி இருப்பின் தழை மற்றும் ஜிங்க் சத்துக் குறைபாடு ஏற்பட்டு இளம்பயிர்கள் இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாற வாய்ப்புண்டு.

இதைப்போக்க, நீரை வடித்தவுடன் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழியாக தெளித்திட வேண்டும்.

தண்டு உருவாகும்போதும், பூக்கும் பருவத்திலும் நீர் தேங்கி பயிர் பாதிக்கப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை 10 லிட்டர் நீரில், தெளிப்பிற்கு முந்தைய நாள் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழியாக தெளித்திட வேண்டும். நீர் தேங்குவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படின் நீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும்.

ஊடு நடவு செய்ய வேண்டும்

நெற்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கி இருப்பின் குருத்து ஈ, இலைச்சுருட்டு புழு, பச்சை தத்துப்பூச்சி போன்ற பூச்சிகளாலும் குலைநோய், இலையுறை கருகல் நோய் போன்ற நோய்களாலும் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைக் கண்டறிந்து தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வயலில் தேங்கிய நீரால் இளம்பயிர்களில் அழுகல் ஏற்பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுகளை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக நாற்றுகள் கொண்ட குத்துகளில் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும்.

இதுதவிர, இயற்கை இடர்பாடுகளால் உண்டாகும் பயிர்ச் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற் பயிரை காப்பீடு செய்திடலாம். பயிர்க் காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி வரை காலஅளவு உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உடனடியாகக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயனடையலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண் மையங்களை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments