என்ன கொடுமை சார் இது.? நபர் ஒன்று தான் ஆனால் 11 ஓட்டு போடலாம்...!தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 100 சதவீதம் நடுநிலையாக, நேர்மையாக நடந்து கொள்கிறது என்று அதன் ஆணையாளர் பழனிச்சாமி பத்திரிகை பேட்டியெல்லாம் கொடுக்கிறார். ஆனால் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் இனி நடக்கப் போகிற நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் வரை எல்லாம் குளறுபடிகள் தான்.


பல வருடங்களாக ஒரே முகவரியில் வசிப்பவர்களில் பல பேருக்கு இப்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. ஆனால் கின்னஸ் சாதனையாக ஒரே நபருக்கு வாக்காளர் பட்டியலில் 11 ஒட்டு போட இடம் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த பெருங் கூத்து ஈரோட்டில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சென்ற டிசம்பர் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 24 ஆயிரத்து 897 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 64 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும், 79 மாற்று பாலினத்தவரும் என ஆக மொத்தம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளதாக பட்டியல் வெளியிட்டது மாவட்ட நிர்வாகம். அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். 

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு, மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 912 மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகளில் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் படிவம், பெயர், போட்டோ திருத்தம் செய்தல் போன்ற பல பணிகள் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல முறை சிறப்பு முகாம் நடந்து வந்ததால், ஒரு சில வார்டுகளில் திருத்தப்படாமல் இருப்பது தொடர்ந்து வாடிக்கையாக இருந்து வருகிறது. 

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் பாகம் 109 ல், முனியப்பன் கோவில் வீதி, நேதாஜி நகர், விஎன்எம் சின்ன கவுண்டர் நகர் பகுதிக்கான வாக்காளர் பட்டியலில், வரிசை எண் 42 ல் இருந்து 52 வரையில், வாக்காளர் அடையாள அட்டை எண் மட்டும் மாறியுள்ளது, ஆனால் பெயர்: ரகுபதி, தந்தை பெயர் வெங்கடாங்லம், அவரது வீட்டு எண் மற்றும் வயது 56 என ஒரே படம் மற்றும் முகவரி 11 இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து  18வது வார்டு அரசியல் கட்சியினர் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி பாகம் 109 ல் வாக்காளர் பட்டியில் ஒரே படம், முகவரிகொண்டை 11 இடத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார். பட்டியல்படி அவர் 11 ஓட்டு போடலாம். இந்த தவறை சரி செய்யாமல் வாக்காளர் பட்டியலில் அப்படியே உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இது தான் தேர்தல் கமிஷன் லட்சணம்" என்றனர்.

Source: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments