டி20 தொடரை இந்தியா வென்றது எப்படி? முக்கிய காரணங்கள்



ஹாமில்டனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 3-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் வென்ற இந்தியா தொடரை 3-0 என்று வென்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுக்க, போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஆக்லாந்தில் நடைபெற்றன. முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இந்த டி20 தொடரை இந்தியா வென்றதற்கு 5 முக்கிய காரணங்களை காண்போம்.

ரோகித்தின் அதிரடி பேட்டிங்

சூப்பர் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில், இரண்டு பந்துகளையும் மிகவும் அற்புதமாக சிக்சருக்கு திருப்பிய ரோகித் சர்மா, போட்டியையும், தொடரையும் இந்தியா வெல்ல காரணமாக அமைந்தார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர் இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தபோது மிகவும் அதிரடியாக விளையாடி குவித்த 65 ரன்கள் இந்தியா கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியது.

விராட் கோலியின் தலைமை

இந்த தொடரை இந்தியா வெல்வதற்கு அணித்தலைவர் விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களை திறன்பட கையாண்டது அணிக்கு பலனளித்தது.

மிகவும் பரபரப்பான தருணங்களில் நிதானம் இழக்காமல் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் அவரின் பேட்டிங் ஆகியவை அணியின் வெற்றிகளுக்கு பெரிதும் உதவின,

சோபிக்காத நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்

ஓரிரு பேட்ஸ்மேன்களை தவிர இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக நன்கு பங்களிக்கவில்லை.

மூன்றாவது போட்டியில் கேன் வில்லியம்சன் எடுத்த 95 ரன்கள் தவிர மற்ற பங்களிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் அமையவில்லை.

பும்ரா, ஷமியின் அபார தாக்கம்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரும் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசினர்.

ரன்கள் விட்டுக் கொடுத்தபோதும் நிதானம் இழக்காமல் அவர்கள் முக்கிய தருணங்களில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்தனர்.

கே எல் ராகுலின் அற்புத பங்களிப்பு

இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே எல் ராகுல் அணியின் விக்கெட் கீப்பராகவும் நன்கு பங்களித்தார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் எடுத்த ராய் சத்தங்கள் அணியின் வெற்றியை உறுதியாக்கியது. இவருக்கு பக்கபலமாக ஷ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக விளையாடினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments