குடியரசு தினம் மட்டுமல்ல.. நாளை கிராமசபை கூட்டம் நடக்கும் தினம்: பங்கேற்போம்.. விவாதிப்போம்.. தீர்மானிப்போம்!



நாளை ஜனவரி 26, குடியரசு தினம். தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதுடன் முடிந்துவிடுவதில்லை நமது ஜனநாயகக் கடமை. காந்தியடிகள் வலியுறுத்திய பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை வலுப்படுத்த, அன்றைய தினம் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் நம் கடமை. நாளைய கிராம சபைக் கூட்டத்தில் நாம் கலந்துகொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய 4 நாட்கள் கிராமசபைக் கூட்டத்தை கூட்டுவது கட்டாயம்.

நாளை (ஜனவரி 26) நடத்த வேண்டிய கிராமசபைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை, சுகாதார திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட விவாதிக்க வேண்டிய தீர்மானங்களை தற்போது தமிழக அரசே அளித்துள்ளது.

மாநில அரசு அளித்துள்ள தீர்மானங்களுடன் அந்தந்த கிராமங்களுக்கு தேவையான தீர்மானங்களையும் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்று வது அவசியம்.

இதுகுறித்து பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பான விழிப் புணர்வு களப் பணிகளில் இயங்கி வரும் நந்தகுமார் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகள், மக்களின் தேவைகள், கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு கிராமசபையில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் இறுதிசெய்ய வேண்டும்.

அந்த விழிப்புணர்வு இல்லாததால் அனைத்து ஊராட்சிகளுக்கும் சேர்த்து ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை இயக்குநரகத்தால் தீர்மானங்கள் தயாரிக்கப்படுகிறது.

வரும் ஜனவரி 26 கிராம சபைக்கான அஜெண்டா சில நாட்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு கிராமசபை பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஒட்டப்பட்டிருக்கும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் இதை படித்து விட்டு அதன் நகலையும் எடுத்துக்கொண்டு கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். தீர்மான அம்சங்கள் குறித்து விவாதித்து, திட்டங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம் குறித்து ஊராட்சி நிர்வாகம் அந்தந்த கிராமங்களில் தண்டோரா ஒலித்தும், பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டியும் தெரிவிக்க வேண்டும். சில இடங்களில் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டாலும், பரவலாக மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் நிலைமை மாறிவருகிறது. கடந்த ஒரு ஆண்டுகளாகவே இது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக பங்கேற்கின்றனர். பஞ்சாயத்தின் செயல்பாடுகள், அடிப்படை பணிகள், அரசுத் திட்டங்கள் குறித்து கேள்வி கேட்கின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க விரும்பு வோர் வழக்கமாக கிராமசபை கூடும் இடத்தில் திரண்டு, காலை 10 மணிக்கு கூட்டம் நடத்தவில்லை என்றால், அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அப்படியும் யாரும் வராவிட்டால், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் தற்போதைய மத்திய அரசு பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. அதில் முக்கியமானது, வெளிப் படையான நிதி நிர்வாகம். ‘பஞ்சா யத்து ராஜ் இன்ஸ்டிடியூஷன்ஸ் டிரான்ஸ்பரன்ட் அக்கவுன்டிங்’ என்கிற மென்பொருள் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. தங்களது கிராமப் பஞ்சாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி யுள்ள நிதி மற்றும் வரவு செலவு கள் குறித்து இணையதளத்தில் (www.accountingonline.gov.in) தெரிந்துகொண்டு, உரிய புள்ளி விவரங்களுடன் சென்றால், கிராம சபையில் முறையாக கேள்வி எழுப்பலாம். இது உங்கள் வரவை ஆக்கப்பூர்வமாக்கும்!

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments