இந்து முறைப்படி இஸ்லாமியர்கள் முன்னின்று மசூதியில் நடத்தி வைத்த திருமணம்!! இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்த கேரள தம்பதி!!



கேரளாவில் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து இந்துமதத்தைச் சேர்ந்த ஜோடிக்கு இந்துமத முறைப்படி திருமணம் செய்துவைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது சேரவல்லி பகுதி. இப்பகுதியில் உள்ள மசூதியில் செயல்பட்டுவரும் சேரவல்லி முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு கடந்த நவம்பரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தில், கணவரை இழந்த பிந்து என்ற பெண் ஒருவர், தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க உதவி தேவைப்படுவதாகவும், அதற்கு ஜமாத் கமிட்டி உதவவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இதனையடுத்து, பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு தங்கள் மசூதியிலேயே திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டு, திருமணத்தை ஜனவரி 19ம் தேதி நடத்தலாம் என்று நாள் குறிக்கப்பட்டது.

இதன்படி பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும், கயம்குளம் பகுதியைச் சேர்ந்த சசிதரனின் மகன் சரத் சசிக்கும் ஜமாத் கமிட்டியின் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றது.

இது குறித்து ஜமாத் கமிட்டியைச் சேர்ந்த நஜுமுதீன் கூறுகையில்,

 “பிந்துவின் கோரிக்கை கடிதம் கிடைத்ததும் ஜமாத் கமிட்டியில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் இது குறித்து ஆலோசனை செய்தோம். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பிந்துவின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க உதவுவதாக தெரிவித்தனர். பிந்து தன் 3 பிள்ளைகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பிந்துவின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட தனியொருத்தியாக தன் பிள்ளைகளை வளர்க்க துயரப்பட்டு வந்தார். அவரது குடும்ப சூழல் குறித்து நன்கு தெரிந்ததால், பிந்துவின் மகள் திருமணத்தை நாங்களே செய்துவைக்க முடிவு செய்தோம்” என்று கூறினார்.

இஸ்லாமிய சமூகத்தினர் செய்துவைக்கும் திருமணம் என்றாலும், இத்திருமணமானது இந்து முறைப்படிதான் நடக்கும் என்று ஜமாத் கமிட்டியினர் தீர்மானித்துள்ளனர். இதற்காக, பிந்துவின் மகளுக்கு பத்து சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுத்து, அஞ்சுவின் திருமணத்தை இஸ்லாமியர்களே முன்னின்று நடத்திவைத்துள்ளனர்.

இது குறித்து நஜுமுதின் மேலும் கூறுகையில்,

 “பிந்துவின் மகளுக்கு நாங்கள் திருமணம் செய்துவைப்பதை, நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களுடன் இணைத்து பேசுகின்றனர். ஆனால், பிந்துவை எங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவரது கணவர் இறந்த போது அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்வதற்கு கூட இயலாமல் இருந்தார். இந்த விசயமானது எனக்கு தெரியவர உடனடியாக பிந்துவை தொடர்பு கொண்டு, அவரது கணவரின் இறுதிச்சடங்கை செய்வதற்கு ஏற்பாடு செய்தோம். அப்போது அவரது மகன் ஆனந்த் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அவரது தந்தை இறப்பு குறித்து எதுவும் தெரியாத நிலையில், எல்லா உதவியையும் கமிட்டியின் உதவியுடனே செய்தோம். பிந்துவின் கணவர் இறந்தது முதல் அவர்களை எங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி எங்களை தொடர்பு கொண்ட பிந்து, தனது மகளின் திருமணத்தை நடத்தி வைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை ஜமாத் கமிட்டி ஏற்றுக்கொண்டதோடு அவர்களது திருமணத்தை மனப்பூர்வமாக நடத்தி வைத்துள்ளோம்” என்று கூறினார்.

ஜமாத் கமிட்டியினர் பிந்துவிற்கு கொடுத்த வாக்குறுதியின் படி,  இன்று அஞ்சு மற்றும் சரத் சசியின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இச்செயலுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன்:

, “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சேரவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி ஆஷா & சரத் ஆகியோரின் இந்து மத திருமணத்தை நடத்தி வைத்துள்ளது. ஆஷாவின் தாய் அவர்களிடம் உதவி கோரியதையடுத்து அந்த மசூதியானது திருமணத்திற்கு உதவி செய்துள்ளது. புதுமணத்தம்பதிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், மசூதி நிர்வாகத்தினருக்கும், சேரவல்லி மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்து மத ஜோடிகளுக்கு, இஸ்லாமியர்கள் முன்னின்று திருமணம் செய்துவைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு தரப்பினரிடம் பாராட்டை பெற்றுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments