புதிய ஊராட்சி தலைவர்களுக்கு தடை அரசு அதிரடி உத்தரவு !!!




ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள, ஊராட்சி தலைவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக , அதிரடி உத்தரவை, அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் காசோலை முறையை ரத்து செய்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, ஊராட்சி தலைவர்கள் , ஊராட்சி செலவுகளுக்காக இனி காசோலைகளை பயன்படுத்த முடியாது. பொது நிதி மேலாண்மை எனும், ' ஆன்லைன்' வழி பரிவர்த்தனையை மட்டுமே செயல்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த மாதத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.

ஊராட்சி தலைவர்களிடம் ஊராட்சி பொறுப்பை ஒப்படைக்கும்படி தனி அலுவலர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கிராம ஊராட்சிகளில் ஊராட்சி பொது நிதி; மத்திய மாநில அரசுகளின் மானிய நிதி; நிபந்தனைக்கு உட்பட்ட மானிய கணக்கு நிதி; மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீட்டின் கீழ் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

ஊராட்சி பொது நிதியில் பொது மக்கள் செலுத்தும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, கடைகள், நிறுவனங்களின் உரிமக் கட்டணங்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் தொழில் வரி ஆகியவற்றின் கீழ் கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மாநில நிதிக் குழு மானிய நிதி ஒவ்வொரு ஊராட்சியின் மக்கள் தொகைக்கேற்ப 20 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது.

இதில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இது தவிர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட நிதியில் இந்திரா நினைவு குடியிருப்பு பசுமை வீடு திட்டம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் ஆகியவற்றுக்கு பணம் செலவிடப்படுகிறது.

ஊராட்சி நிதியில் முறைகேடு செய்வதை தடுக்க நிதி பரிவர்த்தனைகள் பொது நிதி மேலாண்மை அமைப்பின் வழியே செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு பி.எப்.எம்.எஸ். எனப்படும் பொது நிதி மேலாண்மை அமைப்பின் வழியே எவ்வாறு நிதி பரிவர்த்தனை செய்வது என்பதை கற்று கொடுக்கும்படி தனி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊராட்சி நிதி நிர்வாகம் பி.எப்.எம்.எஸ். திட்டத்தின் கீழ் வந்துள்ளதால் காசோலைகள் பயன்பாடு அவசியம் அற்றதாகி விட்டது. எக்காரணத்தைக் கொண்டும் ஊராட்சி கணக்குகளின் கீழ் காசோலைகளை பயன்படுத்தக் கூடாது. ஊராட்சி மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த மட்டும் காசோலைகள் அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஊராட்சிகளில் பி.எப்.எம்.எஸ். திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே ஊராட்சி செயலர் 'ஆன்லைன்' வழி பண பரிவர்த்தனைக்கான 'பிரின்ட் பேமன்ட் அட்வைஸ்' எனப்படும் பி.பி.ஏ. கடிதத்தை தயாரித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்; அவர் அதை அங்கீகரிப்பார்.அதன்பின் அந்த கடிதத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையொப்பமிட்டு வங்கிக்கு அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த கடிதம் பத்து நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும்.

ஊராட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்ததாரர் ஜி.எஸ்.டி. வரி செலுத்தி பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து பண பரிவர்த்தனைகளும் 'ஆன்லைன்' வழியே நடக்கும். எனவே யாரும் பணத்தை நேரடியாக எடுக்க முடியாது. இந்த திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வர ஓரிரு மாதங்களாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.   
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments