படித்தது பொறியியல்... பார்ப்பதோ மீன் விற்பனை! வருமானமோ ஒரு லட்சம்!!



மோகன்குமார் கந்தா மீன் உணவு கடையில்...
மோகன்குமார் கந்தா மீன் உணவு கடையில்... ( நா.ராஜமுருகன் )


`நான் பி.இ, எம்.இ படிச்சு முடிச்சுட்டு, தனியார் கம்பெனியில் ஒரு வேலை, பிறகு தனியார் கல்லூரியில் பேராசிரியர் வேலைனு பார்த்தேன். மாசம் அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை சம்பளம் கிடைச்சுச்சு. ஆனா, அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம்னு மனஉளைச்சல் ஏற்பட்டுச்சு. அதனால், அப்பா பார்த்த மீன் கடை தொழிலில் இறங்கினேன். எல்லோரும், `இன்ஜினீயரிங் படிச்சுட்டு, இப்படி பாழுங்கிணத்துல விழுறியே'னு திட்டினாங்க. ஆனா, 100 சதவிகிதம் நம்பிக்கையோடு செயல்பட்டேன். இப்போ, மாசம் ஒரு லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கிறேன்" என்று மகிழ்ச்சியாக பேசுகிறார், மோகன்குமார்.
கரூர் மாவட்டம், காந்திகிராமத்தில் இயங்கி வருகிறது, இவரின் கந்தா மீன் உணவகம். கரூர் முழுக்க உள்ள 30 ஹோட்டல்கள் மற்றும் 10 பிரியாணி கடைகளுக்குப் பதப்படுத்தப்பட்ட கடல் மீன்கள் மற்றும் பிரபல கம்பெனியின் சிக்கனையும் சப்ளை செய்து வருகிறார்.
கந்தா மீன் உணவகம்

சொந்தத் தொழில், நிறைவான வருமானம் என்று ஏறுமுகத்தில் இருக்கும் மோகன்குமாரைச் சந்தித்தோம். மீனுக்கு மசாலாவைச் சேர்த்தல், ப்ரை செய்தல், சில்லி மீன் தயாரித்தல் என்று பம்பரமாகச் சுழன்று வேலைபார்த்துக்கொண்டிருந்த மோகன்குமார், அவ்வப்போது கிடைத்த இடைவேளை நேரத்தில்தான் நம்மிடம் பேசினார்.


``எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளைதான். எங்கப்பாவுக்கு இது பூர்வீகத் தொழில் கிடையாது. 13 வருஷத்துக்கு முன்புவரை, எங்க மாமா பன்னீர்செல்வம்தான் இந்தக் கடையை நடத்திகிட்டு இருந்தார். அவர் வெள்ளக்கோயில்ல மீன் கடை நடத்த ஏற்பாடு பண்ணினார். அதனால், இந்தக் கடையை எங்கப்பாகிட்ட கொடுத்துட்டு, அவர் வெள்ளக்கோயில் போயிட்டார். தனியார் கம்பெனியில் வேலைபார்த்துகிட்டு இருந்த எங்கப்பா பழனிவேலு, அங்க தனியா தங்கியிருந்தப்ப சமைச்சு சாப்பிட்ட அனுபவத்தை வைத்து, இந்தக் கடையில் மீன் உணவைத் தயாரித்தார். ருசி நல்லா இருக்கவே, கடை ஓரளவு பிக்கப் ஆனுச்சு. ஆனால், எனக்கு இந்தத் தொழிலில் ஆரம்பத்துல ஈடுபாடு இல்லை. அதனால், நான் கடைக்குப் போகவேமாட்டேன்.
மோகன்குமார்

அதோட, என்னை நல்லா படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்பணும்னுதான் என்னோட பெற்றோரும், மாமாவும் விரும்புனாங்க. அதனால், கோயமுத்தூர்ல என்னை பி.இ மெக்கானிக்கல் படிக்க வச்சாங்க. 2014-லில் பி.இ படிப்பை முடிச்சேன். மேற்கொண்டு, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், கடந்த 2016-ம் ஆண்டு எம்.இ டிசைனிங் படிச்சு முடிச்சேன். படிச்சு முடிச்சதும், உடனே சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் 8,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன்.


அதனால், கரூர்ல உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில பேராசிரியராக 2017-ம் ஆண்டு சேர்ந்தேன். ரூ.15,000 சம்பளம் கொடுத்தாங்க. ஆனா, காலை எட்டரை மணியில் இருந்து மாலை 6 மணிவரை வேலை கொடுப்பாங்க. இதுக்கிடையில், எங்கம்மா செல்வராணிக்கு நியூரோ பிரச்னை ஏற்பட்டுச்சு. அவங்களை மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போக, அப்பா அடிக்கடி கடைக்கு விடுமுறை விடுறாப்புல ஆனுச்சு. அதனால், நான் அதிரடியா ஒரு முடிவு எடுத்தேன். `கொஞ்ச சம்பளத்துல யாருக்காகவோ மாடுமாதிரி உழைக்குறதுக்கு, பேசாம அப்பா பார்க்கும் மீன் உணவுக் கடையையே எடுத்து நடத்தலாம்'னு நினைச்சேன்.
கந்தா மீன் உணவகம்

அதுக்காக, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன்ல வேலையை விட்டுட்டேன். வீட்டுல காரணத்தைச் சொன்னதும், `இதுக்காகவா உனக்கு லோன் மூலமா 4 லட்சம் வரை கடன்வாங்கி படிக்க வச்சோம். உன் தலையில நீயே மண்ணள்ளிப் போட்டுக்காத. இங்க இருந்தியன்னா, பொண்ணு கிடைக்காது. ஒழுங்கா வேலைக்குப் போ'ன்னாங்க. எங்க மாமா, `மோகன் வேலைக்குப் போக மறுத்தா, பேசாம மீன் உணவுக்கடையை மூடிருங்க'னு சொன்னார்.
ஆனால் நான், 100 சதவிகிதம் உறுதியா, `மீன் உணவுக் கடைதான்'னு இருந்தேன். இதனால், வேற வழியில்லாம வீட்டுல வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டாங்க. 2018 நவம்பர்ல கடைக்கு வந்தேன். அதுக்கு முன்னாடிவரை அப்பா மாசம் ரூ 30,000 வரை லாபம் பார்த்தார். நான் கடைக்குப் போனதும், அப்பாகிட்ட மீன் உணவுகளைத் தயாரிக்கும் முறைகளை நன்றாகக் கத்துக்கிட்டேன். அதன்பிறகு, மீன் ப்ரை, நண்டு சூப், சிக்கன் ப்ரை, சிக்கன் லாலிபாப், லெக் பீஸ், சில்லி சிக்கன், சில்லி மீன்னு பல வகை உணவுகளைத் தயாரித்தேன். ஏற்கெனவே, எங்க கடைக்கு நல்ல கூட்டம் வரும்.
மீன் உணவு தயாரிப்பில் மோகன்குமார்

நான் பொறுப்பேற்றபிறகு, அந்தக் கூட்டம் இன்னும் அதிகமாச்சு. வஞ்சிரம், இறால், நெத்திலி, கிழங்கா மீன், டேம் பாறை மீன், நெய் மீன்னு பலவகை மீன்களை உணவுக்குப் பயன்படுத்தினேன். தரமான எண்ணெய், மிளகாய், கடலைமாவை மசாலாவுக்குப் பயன்படுத்தினேன். அதோட, மத்த கடைகள்ல மீன், சிக்கன் உணவுக்கு சைடிஷா வெங்காயம் மட்டும் தருவாங்க. ஆனா, நான் ஒருவகை சட்னியைக் கொடுத்தேன். இதுவும், பலரும் இங்கே சாப்பிட வருவதற்கு காரணம் ஆனுச்சு. இதனால், மீன் உணவு கடையில மட்டும் எல்லா செலவுகளும் போக, மாதம் ரூ.50,000 லாபம் கிடைத்தது.

ஆனால், நான் அதோட தேங்கி நிற்கவில்லை. அடுத்து, இங்குள்ள ஹோட்டல்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பதப்படுத்தப்பட்ட மீன்கள் மற்றும் பிரபல சிக்கன் கம்பெனியின் சிக்கன்களையும் சப்ளை பண்ணும் தொழிலில் இறங்கினேன். ஆரம்பத்துல தொழில் புரிபடலை. தத்திமுத்தி மெள்ள மெள்ள தொழிலைக் கத்துக்கிட்டேன். இப்போ, கரூரில் உள்ள 30 ஹோட்டல்களுக்கும், 10 பிரியாணி கடைகளுக்கும் பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கனையும் தினமும் சப்ளை பண்ணுகிறேன். இதன்மூலம், எல்லா செலவுகளும் போக, மாதம் ரூ 50,000 லாபம் கிடைக்குது. மொத்தமா, மாசம் இப்போ ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். எங்கம்மா பெயர்ல ஐ.டி-யும் ரன் பண்ண ஆரம்பிச்சேன். தொழிலை மேம்படுத்த லோனும் வாங்கியிருக்கிறேன். அதேநேரம், என் படிப்புக்காக எங்கப்பா பேங்குல வாங்கிய நாலு லட்ச ரூபாயில் முக்கால்வாசியை அடைச்சுட்டேன்.
மீன் உணவு


கரூர் மாவட்டம் முழுக்க உள்ள எல்லா ஹோட்டல்களுக்கும் நான் தினமும் 3 டன் பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கன்களை சப்ளை பண்ணனும், அதன்மூலமா மாசம் மூணு லட்சம் வரை சம்பாதிக்கணும் என்கிற லட்சியத்தோடு செயல்படுறேன். ஹோட்டல்களில் சப்ளை செய்ய நான் வாங்கும் பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் சிக்கன்களை விற்க முடியாமல் போனாலும், அவற்றை என் மீன் உணவுக்கடையில் பயன்படுத்திக்கிறேன். இதனால், எனக்கு ஜீரோ லாஸ்தான். கரூர்ல உள்ள படித்த இளைஞர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக மாறணும். அதை நோக்கிதான் ஒவ்வொரு அடியா பார்த்துப் பார்த்து எடுத்து வெச்சுக்கிட்டு இருக்கேன். ஒருநாள் அந்த இடத்தை அடைந்தே தீருவேன்" என்றார், நம்பிக்கை சொட்டும் வார்த்தைகளில்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments