தலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி மாணவன் தற்கொலை




      தலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்ற தாயார் முடியை வெட்டிவிட்டதால், கோபமடைந்த பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கணவனைப் பிரிந்து ஒரே மகனுடன் வாழும் தாய், மகனும் தற்கொலை செய்ததால் தனி மரமானார்.

வளசரவாக்கம் அருகே கைகான் குப்பம், வ.ஊ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா (35). சினிமா படப்பிடிப்புத் தளங்களில் சமையல் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். ஒரே மகன் சீனிவாசன் (17) பிளஸ் 2 படித்து வந்தார்.
தன் வாழ்க்கையின் ஒரே எதிர்பார்ப்பான மகன் மீது மோகனா மிகுந்த பிரியம் வைத்திருந்தார். தனது மகனை நன்கு படிக்க வைத்து தனது வாழ்க்கையில் தொலைந்துபோன சந்தோஷத்தை அதன் மூலம் மீட்கலாம் என்று கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். வீட்டில் வைத்துப் படிக்க அனுப்பினால், தான் வேலைக்குச் செல்வதால் மகனை சரிவரக் கவனிக்க முடியாது என்பதால் குன்றத்தூரில் அரசுப் பள்ளியில் சேர்த்து, அங்கேயே ஒரு தங்கும் விடுதியில் மகனை தங்கவைத்துப் படிக்க வைத்தார்.
சீனிவாசன் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குத் தயாராகி வந்தார். பொங்கல் விடுமுறை காரணமாக தாயாரைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என சீனிவாசன் முடிவெடுத்திருந்தார். நேற்று காலையில் மகனைப் பார்த்த மோகனா, தலைமுடி அதிகமாக வளர்ந்திருப்பதைப் பார்த்துக் கோபப்பட்டுக் கேட்டுள்ளார்.
இப்படி இருப்பதுதான் தனக்குப் பிடிக்கிறது என்று மகன் சீனிவாசன் சொல்ல, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், இதுபோன்று கவனம் திசை திரும்பினால் எப்படி படிப்பாய் எனக் கண்டித்தார். மகன் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக முடிவெட்டும் கடைக்கு அழைத்துச் சென்றார்.
முடிவெட்டிய பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்தார். இதனால் தாயின் மீது கோபத்தில் இருந்த சீனிவாசன் கடுமையான கோபத்துடன் தாயுடன் சண்டை போட்டுள்ளார். மோகனா மகனைத் திட்டியுள்ளார்.
இதனால் கோபமுற்ற சிறுவன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துக் கையை அறுத்துக் கொண்டார். இதைப் பார்த்த மோகனா, மகனைச் சமாதானப்படுத்தவில்லை. என்ன பிரச்சினை எனக் கனிவாகவும் பேசவில்லை. மகனை இன்னும் அடித்துக் கண்டித்து, வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
அம்மா அடித்த கோபம், விடலைப் பருவத்தின் வேகம் முன்பின் யோசிக்காமல் சீனிவாசன் தற்கொலை செய்யும் முடிவுடன் வீட்டிலிருந்த தாயின் புடவையை எடுத்து உத்தரத்தில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது.
இரவு வேலை முடிந்து மோகனா வீட்டிற்கு வந்துள்ளார். விளக்கு எரியாமல் வீடு இருளாக இருப்பதைப் பார்த்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியில் உறைந்தார்.
மோகனாவின் ஒரே மகன் சீனிவாசன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். சிறுவன் தூக்கில் தொங்கியது குறித்து வளசரவாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு வந்த போலீஸார் சீனிவாசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணையில் முடிவெட்டச் சொல்லி தாய் கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் சீனிவாசன் இத்தகைய முடிவைத் தேடிக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
கணவரைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த தான், தனக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த துணையான மகனும் இப்படிச் செய்துகொண்டானே, நான் அனாதை ஆகிவிட்டேனே என தாய் மோகனா அழுதது அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments