திருச்சியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம்



திருச்சியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் திருச்சியில் அவைத்தலைவர் மௌலானா  நாசர் உமரி தலைமையில் (04-02-2020 ) நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாய்,  துணைப் பொதுச் செயலாளர் செய்யது முஹம்மது பாரூக், மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராசுதீன் ஆகியோருடன் மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவையில் பிப்ரவரி-29 அன்று நடைபெற உள்ள குடியுரிமை கருப்புச் சட்டங்களுக்கு எதிரான மாநில அளவிலான வாழ்வுரிமை  மாநாட்டை  லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில்  நடத்துவது என ஏகமனதாக உறுதி செய்யப்பட்டது.


அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

தீர்மானம் - 01

எழுச்சிமிக்க மாநாடு:

கொங்கு மண்டலமாம் கோவை மாநகரில் எதிர்வரும் பிப்ரவரி 29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக எழுச்சிமிகு வாழ்வுரிமை மாநாடு நடைபெற உள்ளது.
   
வஞ்சிக்கப்படும் மக்களின்  உரிமைகளை மீட்கவும், குடியுரிமையை பறிக்கும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மாபெரும் மக்கள் எழுச்சியை காட்டும் வகையில்  , கோவையில் பிப் 29 அன்று நடைபெற உள்ள வாழ்வுரிமை மாநாட்டை லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் நடத்திட  இச்செயற்குழு உறுதியேற்கிறது..
  
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும்  ஜனநாயக விழுமியங்களை காக்க அலைகடலென திரண்டு கோவை மாநகரில் சங்கமிப்போம் என  தமிழக மக்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 02

குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு:

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும் ,சர்வதேச ஒப்பந்தத்திற்கும்  எதிரானது. 

அதுபோல் NRC, NPR போன்ற குடியுரிமை தொடர்பான சட்டங்கள் நாட்டின் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எனவே CAA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் NPR, NRC சட்டங்களை நாட்டில் அமல்படுத்தக் கூடாது எனவும், இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 03

குடியுரிமை போராளிகளுக்கு இரங்கல்:

குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்று வரும் அமைதி வழி ஜனநாயகப் போராட்டத்தில் அரசபடைகளின் அத்துமீறலுக்கு பலியான குடியுரிமை போராளிகளின் தியாகத்தை இச்செயற்குழு போற்றுகிறது.

மங்களூர், உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம் என பல இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின்  குடும்பத்தினர்களுக்கு  இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவித்துக் கொள்கிறது..

டெல்லி ஷாவின் பாக் திடலில் போராட்டத்தின் போது உயிர் துறந்த 4 மாத குழந்தையான முகம்மது ஜஹானுக்காக பிரார்த்திப்பதுடன், அவரது பெற்றோருக்கு இச்செயற்குழு நெஞ்சார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 04

தமிழக அரசுக்கு கோரிக்கை:

கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநில அரசுகள் சட்டமன்றத்தை கூட்டி புதிய குடியரிமை சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போல தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 05

சாதி வாரி கணக்கெடுப்பு:

மக்களின் நல்வாழ்வு திட்டங்களை அமல்படுத்தும் வகையில்  மத்திய அரசு, பழைய வடிவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்றும், அதில் சாதி வாரி கணக்கெடுப்பையும் இணைக்க வேண்டும் என்றும் இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் - 06 

கள்ள துப்பாக்கி சூடுகளுக்கு கண்டனம்:

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக குடியுரிமை சட்டங்களுக்கு  எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், அதை ஒடுக்கும் விதமாக சங் பரிவார  பயங்கரவாதிகள் அமைதியாக போராடும் மக்கள்  மீது கடந்த 5 நாட்களில் ,தொடர்ந்து டெல்லியில் மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதை இச்செயற்குழு கண்டிப்பதோடு, அவர்களுக்கு பின்னால் இருக்கும் சக்திகளை கண்டறிந்து, கள்ள துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

இது மக்கள் எழுச்சியை கொல்லைப்புறமாக சீர்குலைக்கும்  செயல் என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

தீர்மானம் - 07

மாணவர்களை தாக்காதே:

டெல்லி ஜவஹர்லால் நேரு மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது ABVP ஆதரவு ரவுடிகளும், டெல்லி காவல்துறையும் நடத்திய  தாக்குதல்கள் ஜனநாயக விரோதமான போக்குகள்  என இச் செயற்குழு கண்டிப்பதுடன், அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு  தார்மீக ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 08

தனியார் மயமாக்கல்  கூடாது:

நாட்டின் வளங்கொழிக்கும் பொதுத்துறை நிறுவனமான LIC-யை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.

இம்முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதுடன் ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவுகளையும் கைவிட வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 09

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை:

தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டுமென  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 10

மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :

இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மீனவ மக்கள் உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்கிறார்கள். அவர்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மீன் வளத்திற்கு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 11

ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது:

தமிழகத்தில் மரக்காணம் முதல் வேதாரண்யம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும், இதை மத்திய அரசு அமல் படுத்தக் கூடாது என்றும் இச்செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 12

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம்:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு  எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையில்,   தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் குறித்தும்.  சிறுபான்மையினர் குறித்தும் அவதூறாக   பேசி வரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது

தன் பொறுப்பை மறந்து கலவரங்களை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென இச்செயற்குழு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 13

வகுப்பு வாதத்திற்கு எதிராக :

தமிழகத்தில் சாதி மத கலவரங்களை தூண்டும் தீய சக்திகளுக்கு எதிராக  ஜனநாயக சக்திகள்  மேலும்    வலிமையாக செயல்பட தயாராக வேண்டுமென இச்செயற்குழு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 14

தமிழக அரசுக்கு நன்றி:

மஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கோரிக்கையை ஏற்று  தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து என்று அறிவித்த தமிழக அரசுக்கு இச் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 15

வாக்காளர்களுக்கு நன்றி:

தமிழகத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என வெற்றிப் பெற்ற அனைவருக்கும் இச் செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மஜகவினருக்கு வாக்களித்த அனைவருக்கும் இச்செயற்குழு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 16

புணே பல்கலைக்கழகத்திற்கு நன்றி:

இந்தியாவின் முன்மாதிரி இளம்  சட்டமன்ற உறுப்பினர்கள் என்று  நாடு தழுவிய அளவில் இருவரை தேர்வு செய்து, அதில் ஒருவராக மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான  மு  தமிமுன்அன்சாரி அவர்களை  அவர்களைத் தேர்வு செய்து  விருதை  அறிவித்துள்ள புனே அமைதி பல்கலைகழகத்திற்கு  இச்செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 17

நீதியரசர் சச்சார், காவலர் வில்சன்,சிறுவன் சுஜித்துக்கு இரங்கல்கள்;

முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை ஆய்வு செய்து அதை நாடாளுமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வழிவகுத்த  சச்சார் கமிட்டியின் தலைவர் நீதியரசர் சச்சார் அவர்களின் மறைவுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

அதேபோல் சமீபத்தில் மாஃபியாக்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களுக்கும்,

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் சுஜித்திற்கும்  இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 18

வழக்குகளை திரும்ப பெறுக:

ஜனநாயகத்தை சமூக நீதியை சமூக நல்லிணக்கத்தை காக்க சி ஏ ஏ வுக்கு எதிராக தமிழக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


மேற்கண்ட 18 தீர்மானங்களுடன் செயற்குழு நிறைவுற்றது.

செயற்குழுவில் மாநாட்டுக்கு திரளும் மக்கள் எழுச்சி மற்றும் வருகை குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்தாய்வும் நடத்தப்பட்டது.

செயற்குழுவை முன்னிட்டு திருச்சி எங்கும் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்ட மஜக  நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செயற்குழுவுக்கு வந்தவர்கள் பிப்ரவரி  29 அன்று  கோவையில் லட்சக்கணக்கான மக்களுடன் சந்திப்போம் என்ற சூளுரையோடு புறப்பட்டனர்.

தகவல்
மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
திருச்சி_மாவட்டம்
04.02.2020

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments