ஏழ்மையானவர்களுக்கு நிதி உதவி, தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர வாகனம்.! அசத்தும் புதுக்கோட்டை இளைஞர்கள்..!



புதுக்கோட்டை அருகே குலமங்கலத்தில் படித்த பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக இளைஞர்களால் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


நாளடைவில் அது பள்ளிக்கு மட்டுமல்லாமல், கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்து தவிக்கும் பெண்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என அனைவருக்கும் உதவும் வகையில் பாரதப் பறவைகள் அறக்கட்டளையாக மாறியது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 12-வது ஆண்டு நலத்திட்ட விழா நடைபெற்றது.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், கணவரை இழந்து நிர்கதியாக நிற்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தையல் இயந்திரம், அரசுப் பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது, சிறுதொழில் வளர்ச்சி நிதி வழங்குதல் எனப் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள், நிலவேம்பு கசாயப் பொடிகளும் கொடுத்து அசத்தினர்.


இதுபற்றி அமைப்பின் தலைவர் மெய்யநாதன் கூறும்போது, ``பள்ளி வளர்ச்சிக்காக இளைஞர்கள் 10 பேர் சேர்ந்துதான் ஒரு இளைஞர் சங்கமாக ஆரம்பிச்சாங்க. ஆரம்பிக்கும்போது நான் இல்லை. இப்போ ஒரு இளைஞர்கள் நடத்தும் அறக்கட்டளையாக உருவாகிருச்சு. இப்போ, நான் அறக்கட்டளைக்குத் தலைவர். இந்தப் பதவி ஒரு வருஷத்துக்குத்தான். சேவை மட்டும்தான் எங்கள் நோக்கம். ஆரம்பிக்கும்போது 10 பேர், இப்போ ஒத்த கருத்துடைய 150 பேர் உறுப்பினராக இருக்கோம். யார்கிட்டயும், நிதி கேட்டுப் போய் நிற்க மாட்டோம். சிலர் தேடி வந்து கொடுக்கிறதை வேண்டாம்னு சொல்லி தட்டிக்கழிக்க மாட்டோம்.


ஒவ்வொரு வருஷமும் உறுப்பினர்களால கொடுக்க முடிஞ்சத வச்சு நலத்திட்ட உதவிகள் கொடுக்கிறோம். நம்ம பக்கத்து வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படுவர்கள் கண்டிப்பாக இருப்பாங்க. நம்ம ஒருத்தரால் பெரிசா செய்ய முடியாது. அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவணும்னு நெனப்போம். அததான் இப்போ, எல்லாரும் சேர்ந்து செய்துகிட்டு இருக்கோம். பாதிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவுறோம். ஒவ்வோர் உறுப்பினர்களும் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நலிவடைந்தவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதற்கு சுமார் 6 மாத காலம் எடுத்துக்கொள்வோம். இதையடுத்து, விழா ஆயத்தக் கூட்டம் நடத்தி அதில், அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாகப் பயனாளிகளை இறுதி செய்து அவர்களுக்கு விழா நடத்தி உதவிகள் செய்கிறோம். குறிப்பா, ஆரம்பச் சுகாதார நிலையங்கள்ல, பார்த்திருப்பீங்க, மாத்திரைகளைக் கொடுக்கும்போது காகித உறையில் போட்டுக் கொடுக்கமாட்டாங்க. கையிலதான் கொடுப்பாங்க. மக்கள் சில மாத்திரைகளைக் கீழே போட்டுட்டு போயிருவாங்க. முதியவர்கள் சிலர் எந்த மாத்திரை எந்த நேரத்துக்குப் போடுறதுன்னு தெரியாமல் குழப்பத்தோட வாங்கிக்கிட்டு போவாங்க. இந்த நிலையை மாத்தணும்.

அதுக்காகத்தான், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக 15,000 காகித உறைகளைக் கொடுத்திருக்கோம். தொகை சிறியதுதான் ஆனால், அதில் கிடைக்கும் பயன் அதிகம். கைம்பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் நிதி உதவி கொடுத்துள்ளோம். விபத்தில் முடங்குனவருக்கு நிதி உதவி கொடுத்திருக்கோம். தொடர்ந்து, ஒவ்வொரு வருஷமும் இதுபோல நலத்திட்டங்கள் வழங்கணும். புதுக்கோட்டையில் சின்னதா நாங்க சேவையைத் துவங்கி இருக்கோம். இதுபோல, ஒவ்வோர் ஊரிலும் அந்தந்த ஊர் இளைஞர்கள் செய்யணும்" என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments