அவங்களே கேட்பாங்கன்னு நினைச்சேன்.. ஆனா கேட்கலை!' ஆனா கொடுதுட்டேன்



அவங்களே கேட்பாங்கன்னு நினைச்சேன்.. ஆனா கேட்கலை!'- கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர்

அந்த இடத்தைக் கோயிலுக்குக் கொடுக்கணும்னுதான் எனக்கு ஆசை. கோயிலுக்குக் கொடுங்கன்னு கேட்பாங்கன்னு பார்த்தேன். கேட்கலை. அவங்க கேட்கலைன்னா என்ன நம்ம கொடுத்திடலாம்னு முடிவு பண்ணி, அந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் கொடுத்திட்டேன்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் கூத்தாளம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். திருவிழா நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் வரும்போது, கடுமையான நெரிசல் ஏற்பட்டு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

கோயிலுக்கு அருகே இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கலிபுல்லா என்பவருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. அதில், தான் ஒவ்வோர் ஆண்டும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் கலிபுல்லா தானாக முன்வந்து இடப்பற்றாக்குறை போக்கவும், பக்தர்களின் வசதிக்காகவும் தனது ஒரு ஏக்கர் நிலத்தைக் கோயிலுக்குத் தானமாக வழங்குவதாகத் தெரிவித்தார்.

அதன்படி, அந்த 1ஏக்கர் நிலத்தையும் கோயிலுக்குத் தானமாக வழங்கியுள்ளார். கிராம மக்கள் ஒன்று கூட, இந்தப் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், பக்தர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ள, கலிபுல்லாவின் செயலைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுபற்றி கலிபுல்லாவிடம் பேசினோம், ``ஒவ்வொரு வருஷமும் திருவிழா சமயத்தில, போதுமான இடவசதி இல்லாம, விழாக்குழுவினர் சிரமப்பட்டு வந்தாங்க. பக்கத்துலதான் என்னோட இந்த ஒரு ஏக்கர் நிலம் இருந்துச்சு. அந்த இடத்தில தான், ஒவ்வொரு வருஷமும் அன்னதானம் போடுவாங்க. அந்த இடத்தைக் கோயிலுக்குக் கொடுக்கணும்னுதான் எனக்கு ஆசை. `கோயிலுக்குக் கொடுங்கன்னு' கேட்பாங்கன்னு பார்த்தேன். ஆனா, அவங்க யாரும் கேட்கலை.

அவங்க கேட்கலைன்னா என்ன நம்ம கொடுத்திடலாம்னு முடிவு பண்ணி, அந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் கொடுத்திட்டேன். இதுக்கு முன்னாடி, ஆதிதிராவிடர் விடுதிக்கு 50 சென்ட் கொடுத்திருக்கேன். பள்ளிக்கு 5 சென்ட், வர்த்தக சங்கம், வியாபாரிகள் சங்கம்னு பொது நலக்காரியங்களுக்காக எனது நிலத்தைக் கொடுத்திருக்கேன். போகும் போது எதையும் நாம கொண்டு போகப்போறதில்ல. முடிஞ்ச அளவுக்கு நல்லது செய்வோம்" என்கிறார் வெள்ளந்திச் சிரிப்புடன்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments