2000 நோட்டுக்கு தடையா!!!! புழக்கத்திலிருந்து காணாமல் போகும் 2,000 ரூபாய் நோட்டுகள் காரணம் என்ன?!!! ஒர் அலசல்




கடந்த 2017-18 நிதியாண்டின்போது 3,363 மில்லியன் நோட்டுகளாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 3,291 மில்லியனாகக் குறைந்துள்ளது.

2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என்றார். விமர்சனங்கள் வந்தன என்றாலும் அநேக மக்கள் அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்துவிட்டு, 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது மத்திய அரசு. `2,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வெளியிடுவதால், கறுப்புப்பணம் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர, குறையாது. மதிப்பு அதிகமுள்ள நோட்டு என்பதால் பதுக்கி வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால், அதன் புழக்கம் குறைய வாய்ப்புள்ளது' என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்துவந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தற்போது குறைந்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின்போது, 3,363 மில்லியன் நோட்டுகளாக இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 3,291 மில்லியனாகக் குறைந்துள்ளது. சுமார் 72 மில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை என ரிசர்வ் வங்கி 2018-19-ம் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2017-18 நிதியாண்டில் 6,72,600 கோடி ரூபாயாக இருந்த இதன் மதிப்பு, 2018-19-ம் ஆண்டில், 6,58,200 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது, நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தபோது, கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனதைப் போல, இப்போது 2,000 ரூபாய் நோட்டுகளும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
`மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டுவந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் திடீரென ஏன் குறைந்தது, மக்களின் கைகளுக்கு வந்து போய்க்கொண்டிருந்த அந்தத் தாள்கள், இப்போது பார்ப்பதற்கே அரிதானதாக மாறியிருக்கிறதே, ஏன்?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு என்ன காரணம்? ஆர்.பி.ஐ சார்பாக வங்கிகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தச் சொல்லி ஏதேனும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள, வங்கி அதிகாரிகள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை நாங்கள் வழக்கம்போல் ஏ.டி.எம் இயந்திரங்களில் நிரப்பிவருகிறோம். சிலர், தங்கள் தேவைக்காக 2,000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்குகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அதன் காரணமாக, 2,000 ரூபாய் நோட்டுகள் முன்புபோல சுழற்சியில் அதிகம் இல்லை" என்றார், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை வங்கி மேலாளர்.


சென்னை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, ``புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போது அச்சடிக்கப்படாததால், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள்தான் சுழற்சியில் இருக்கின்றன. சுழற்சியிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை நீக்கும்படி எந்த உத்தரவும் வரவில்லை. வழக்கம்போல் ஏ.டி.எம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்புகிறோம்" என்றார்.

சென்னையில் உள்ள ஆர்.பி.ஐ-யின் தென்மண்டல அதிகாரி ஒருவரிடம், 2,000 ரூபாய் தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பினோம். ``ஆர்.பி.ஐ சார்பாக, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து குறைக்கச் சொல்லி சுற்றறிக்கை ஏதும் அனுப்பப்படவில்லை" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


இவர்கள் அனைவரும் குறிப்பிட்டதைச் சரிபார்ப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களில் 2,000 நோட்டுகளைப் பயன்பாட்டுக்கு எடுக்க முடிகிறதா என்பதைப் பரிசோதித்தோம். ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம் இயந்திரங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வரவில்லை. ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் மட்டுமே எடுக்க முடிந்தது. மற்ற இயந்திரங்களிலிருந்து 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்தன.

ஆக, வங்கி அதிகாரிகளும் ஆர்.பி.ஐ அதிகாரியும் 2000 ரூபாய் நோட்டுகள் முடக்கப்படவில்லை என்று தெரிவித்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்திலிருந்து குறைந்து வருவது உறுதியாகியிருக்கிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments