குடும்பக்கட்டுப்பாட்டு செய் இல்லையெனில் புதுக்கோட்டை செல் மிரட்டும் பணியாளர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அவலம்



     
அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு 2-வது பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளிடம் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு பணியாளர்கள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.மறுப்பவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலம் தொடர்கிறது.
தமிழகத்தில் சுமார் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது 4 முதல் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். பத்து குழந்தைகள் உள்ள வீட்டில் பத்தாவது குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் பத்மநாதன் என்றும், பெண் குழந்தையாக இருந்தால் பத்மா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்நிலையில் நாட்டில் வேகமாக பெருகி வந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்திய அரசு குடும்பகட்டுப்பாட்டு திட்டத்தை கொண்டு வந்தது.முதலில் நாம் இருவர், நமக்கு மூவர் என்ற கோஷத்தையும், பின்னர் நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கோஷத்தையும் முன் வைத்தது. மேலும் இந்தியா முழுவதும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு இலவச வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு வழங்கியது. மேலும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை பட்டி தொட்டி எங்கும் அரசாங்கம் பரப்பியது.

அரசின் தீவிர முயற்சியால் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் பல மடங்கு குறைந்தது. இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 2 முதல் 3 குழந்தைகள் என்ற நிலைக்கு மாறியது. இதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 2 குழந்தை என்ற நிலைக்கு வந்தது. தற்போதைய நிலையில் பெரும்பாலான குடும்பங்களில் 2 குழந்தைகள் என்ற நிலையே இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு 2 குழந்தைகளே போதும் என்ற நிலைக்கு வந்து அவர்களாகவே முன்வந்து, தற்போதைய அறிவியல் வளர்ச்சியினால் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எளிமை என்பதாலும்,குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு தாம்பத்தியத்தில் எந்த குறைபாடும் இருக்காது, அவர்கள் வழக்கம்போலவே வழக்கமான அனைத்து பணிகளையுமே செய்ய முடியும் என்பதாலும், அவர்களாகவே விருப்பப்பட்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.இந்த நிலையில் அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனைக்கு 2-வது பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி தாய்மார்களிடம், மருத்துவமனை பணியாளர்கள், உங்களுக்குத்தான் 2வது குழந்தை பிறக்கிறதே, அதனால் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போதே குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து விடுவோம் எனக் கூறுகின்றனர்.

அதற்கு அந்த பெண் ஏதாவது காரணத்திற்காக தனக்கு தற்போது குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் எனக் கூறினால், உடனே மருத்துவமனை பணியாளர்கள், அந்த பெண்ணிடம், இங்கு பிரசவத்தின்போது, பிரச்னை ஏற்பட்டால், உங்களது உடலில் செலுத்த உங்களின் குரூப் ரத்தம் இல்லை. அதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று விடுங்கள் என கூறுகின்றனர்.அவ்வாறு அந்த பெண்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு செல்ல மறுத்தாலும், பணியாளர்கள் கட்டாயப்படுத்தி, புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கின்றனர்.சுகப்பிரசவம் நடைபெற வாய்ப்பு உள்ள கர்ப்பிணி பெண்களையும், மருத்துவமனை பணியாளர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள நிர்ப்பந்தம் செய்கின்றனர்.அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி பெண்களை ,குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, விரும்புபவர்களுக்கு மட்டும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், மற்றவர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பும் முடிவையும் கைவிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments