அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கல் அகற்றம்!' - புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் சாதனை   
அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கல் அகற்றம்!' - புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர் பூண்டி நகரைச் சேர்ந்தவர் மாலா(39). இவர் கடந்த பல நாள்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு வலதுபக்க  சிறுநீரகத்தில் கல் இருப்பதைக் கண்டறிந்தனர். அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால், அதனால் நோயாளிக்குப் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால், அறுவை சிகிச்சையின்றி அக நோக்கி மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் தலைமையில், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் செந்தில் நாதன், லதா மற்றும் மயக்க மருத்துவர்கள் டேவிட், சரவணன் ஆகியோர் இணைந்து சிறு நீரகத்தில் இருந்த கல்லை அக நோக்கி மூலமே அகற்றியுள்ளனர். தற்போது நோயாளி மாலா நலமுடன் உள்ளார். இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் கூறும்போது, ``வழக்கமாக சிறுநீரக வழியில் இருக்கும் கற்கள் அகநோக்கி கொண்டு உடைக்கப்படும். ஆனால், சிறுநீரகத்தில் கல் இருக்கும்பட்சத்தில், அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற வேண்டும்.

அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கல்லை அகற்றும்போது, அந்த இடத்தின் வழியாக, குடல் இறக்கம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில்தான் அதைத் தவிர்க்க, சிறு நீரகத்தில் இருந்த கல்லை அக நோக்கி மூலமே அகற்றத் திட்டமிட்டோம். தற்போது இங்கு அக நோக்கி இல்லாத நிலையில், அவருக்குப் பிரத்யேகமாக வெளியிலிருந்து அந்தக் கருவி வரவழைக்கப்பட்டது. முதலில் சிறுநீரக தாரை வழியாக ஒரு குழாய் செலுத்தப்பட்டுக் கல் கீழே நகராமல் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் அவரின் முதுகுப் பக்கமாக ஒரு ஊசியை வைத்து `சி ஆர்ம்' என்று சொல்லக்கூடிய சிறப்புக் கருவி மூலம் அந்தக் கல் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அக நோக்கி மூலம் உடைக்கப்பட்டது.

4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறுநீரகத்தில் கல் இருந்தால், அறுவை சிகிச்சை செய்துதான் அகற்றவேண்டும் என்ற சூழல் இருந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல்முறையாகச் சிறுநீரகத்தில் இருந்த கல் அறுவை சிகிச்சையின்றி அக நோக்கி மூலமே அகற்றப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென்றால், ரூ.1 லட்சம் வரையிலும் செலவாகும். அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது'' என்றார்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments