புதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 28ம்தேதி துவங்குகிறது.    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 28ம்தேதி துவங்குகிறது. இது குறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 1-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 28ம் தேதி முதல் தொடங்கி தொடர்ச்சியாக 21 நாட்கள் நடைபெற உள்ளது.

கோமாரி நோய் கால்நடைகளை தாக்கினால் கடுமையான பாதிப்புகள் மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு கடும் பொருளாதார இழப்பினையும் ஏற்படுத்தும். கோமாரி நோய் வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் கால் மற்றும் வாய் நோய், காணை மற்றும் கசப்பு நோய் எனவும் அழைக்கப்படுகிறது. கோமாரி நோய் பாதிக்கப்பட்ட கால்நடையில் இருந்து இதர கால்நடைகளுக்கு பரவுகிறது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், கழிவுகள், கால்நடைகளை கையாள்வோர், தீவனத்தட்டு மற்றும் பண்ணை பொருட்கள் மூலம் பரவுகிறது.

இந்நோய் இளங்கன்றுகளில் இருந்து வயதான கால்நடைகள் வரை பாதிக்கக்கூடியது.

 கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் காய்ச்சல், தீவனம் திண்ணாமை, வாயிலிருந்து நுரையுடன் கூடிய நூல் போன்று எச்சில் ஒழுகுதல், கால் குளம்புகள், வாய், உதடு, நாக்கு மற்றும் மடிப்பகுதி ஆகிய இடங்களில் கொப்புளம் உண்டாகி, புண் ஏற்பட்டு தோல் உரிதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். இளங்கன்றுகளில் இறப்பு நேரிடும். கறவை மாடுகளில் பால் குறையும், சினை பிடிக்கும் திறன் குறையும் மற்றும் சினை பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும் எருதுகளில் வேலைத்திறன் குறையும். நோயிலிருந்து மீண்ட கால்நடைகள் இளைத்து, வெயில் தாக்கத்தினை பொறுக்க முடியாமல் கடுமையாக மூச்சு வாங்கும். தீவனம் சரிவர உண்ணாமல் இருக்கும். நோயுற்ற கால்நடைகளை தனியே பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது ஒன்றே இந்நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான வழியாகும். நோய் வந்த கால்நடைகளை தனியே பிரித்து கட்டி பராமரித்து, கஞ்சி உணவாக அளிக்க வேண்டும். 1 சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமி நாசினி கரைசலை கொண்டு கால்நடைகளின் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். கால்நடைகளில் பாதிப்பு ஏற்பட்டவுடன் அருகே உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments