கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை



     
பொது மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் ஏதேனும் இருந்தால் பள்ளிக்கு விடுப்பு எடுத்து கொண்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு பள்ளிக்கு வர வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் 5 சதவீதம் லைசால், 1 சதவீதம் ஹைப்போ குளோரைடு கரைசல் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா வைரசுக்கு தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கு கைகழுவும் முறை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்

இதே போன்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பள்ளிக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்கள், தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒருவர் இருமும் போதும் மற்றும் தும்மும் போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவர்க்க வேண்டும்.

பொது மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. அதே சமயம் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொது மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அர சு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments