சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் தவிக்கும் தினக்கூலிகளுக்கு மூன்று வேளை இலவச உணவு.! புதுக்கோட்டை இளைஞர்கள் அசத்தல்.!



புதுக்கோட்டையில் தினக்கூலி வேலைக்குச் செல்ல முடியாமல் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இளைஞர்கள்  ஏற்பாட்டில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பணக்காரர்கள், நடுத்தர வர்கத்தினர், ஏழைகள், அன்றாட உடல் உழைப்புத் தொழிலாளர்கள் எனப் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தவகையில், புதுக்கோட்டை கீழ 6 ஆம் வீதியில் வசித்து வரும் அன்றாட உடல் உழைப்புக்குச் சென்று வருமானம் ஈட்டும்  தினக்கூலித் தொழிலாளர்கள் தற்போது எங்கும் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் அவர்களின் தினசரி வருமானம் முழுவதுமாக தடைபட்டுள்ளது. மேலும் அவர்களிடம் கையில் சேமிப்பு எதுவும் கிடையாது. இதனால், அவர்களின் மூன்று வேளை சாப்பாட்டிற்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 குடும்பத்தினர் பூக்கட்டுதல், வீட்டு வேலை செய்தல், கட்டிட வேலை, கடைகளில் பணிபுரிதல் என அன்றாட உடல் உழைப்பிலிருந்து கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து  வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால், தற்போது 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால் அவர்களால் எங்கும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இவர்களின் உணவு உள்பட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளும் கேள்விக்குறியாகி உள்ளது.

இவர்களின் இந்த இக்கட்டான நிலையறிந்து இப்பகுதி இளைஞர்கள் விவேக் மற்றும் நியாஸ் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் இணைந்து 144 ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 14ம் தேதி வரை இப்பகுதியில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவது என முடிவு செய்தனர்.

அதன் தொடக்க நாளான இன்று கீழ 6 ஆம் வீதியில் உள்ள  30 குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒருநாள் உணவை வழங்கி இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை இளைஞர்களின் இந்த ஏற்பாட்டினை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments