கொரோனாவால் இறக்கும் முன் திருவிழாவில் பங்கேற்று 23 பேருக்கு பரப்பிய முதியவர்: பஞ்சாபில் தனிமைப்படுத்தப்பட்ட 40,000 பேர்



பஞ்சாபில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்க, அவருடன் தொடர்பில் இருந்ததாக 20 கிராமங்களை சேர்ந்த 40,000 பேரை அம்மாநில அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.


70 வயது மதிக்கத்தக்க முதியவர் சமீபத்தில் உயிரிழக்க, அவர் உயிரிழந்த பின்னர்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜெர்மனி மற்றும் இத்தாலி சென்று திரும்பிய பல்தேவ் சிங், ஒரு மத போதகர். அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டும் அந்த முதியவர் அதனை கேட்கவில்லை என பிபிசி பஞ்சாபி சேவை செய்தியாளர் அர்விந்த சப்ராவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை இந்தியாவில் 700க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பஞ்சாபில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 23 பேர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பால்தேவ் சிங்குடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் உண்மையான எண்ணிக்கையை இதைவிட அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை மிகக் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகிறது. இதனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

130 கோடி மக்கள் வாழும் நாட்டில், இந்த வைரஸ் தொற்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் 70 வயது முதியவர் பல்தேவ் சிங், உயிரிழக்கும் முன்பாக, 'ஹோலா மொஹல்லா' எனப்படும் சீக்கிய திருவிழாவை கொண்டாட மிகப் பெரிய கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

'ஹோலா மொஹல்லா' திருவிழாவில் பஞ்சாப் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள் என்று பிபிசி பஞ்சாபி சேவை தெரிவிக்கிறது.

ஆறு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், நாள் ஒன்றுக்கு குறைந்தது 10,000 பேர் கூடுவார்கள்.

பால்தேவ் சிங் உயிரிழந்த ஒரு வாரத்திற்கு பிறகு, அவரது உறவினர்கள் 19 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Source: BBC தமிழ்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments