`ஊர் நுழைவு வாயிலில் கிருமி நாசினி, சோப்..!' - கொரோனாவைத் தடுக்க களமிறங்கிய செந்தலைப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர்.!



தஞ்சாவூர் மாவட்டம் கட்டுமாவடி அருகே உள்ள செந்தலைப்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு ஊர் நுழைவு வாயிலில் கை மற்றும் முகம் கழுவுவதற்கு பைப் மூலம் தண்ணீர், சோப் மற்றும் டெட்டால் ஆகிய வசதிகளைச் செய்து பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிற ஊராட்சி மன்ற தலைவருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


சீனாவில் உருவாகி பின்னர் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தீர்ப்பதற்கு எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்காததே கொரோனா குறித்து பலரும் அச்சம் கொள்வதற்குப் பெரும் காரணம். தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவி வருகிறது.


இதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் உட்பட மக்கள் கூடும் பகுதிகள் எனப் பல இடங்களில் கொரோனாவால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கை, கால், முகம் ஆகியவற்றை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.


இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கட்டுமாவடி அருகே உள்ள செந்தலைபட்டிணம் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் ரகமத்துல்லா, ஊர் நுழைவாயிலில் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என பிளக்ஸ் போர்டு வைத்து வெளியே சென்று வருபவர்கள் கை மற்றும் முகம் கழுவிவிட்டு ஊருக்குள் வரும் வகையில் பைப் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருப்பதுடன், கை, கால், முகம் கழுவ சோப் டெட்டால் என அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார்.


இது குறித்து ரகுமத்துல்லா அவர்கள் கூறியதாவது,``எங்க ஊரில் இருந்து வெளியூருக்குச் சென்று விட்டு வருபவர்கள், புதிதாக ஊருக்கு வருபவர்கள் என அனைவரும் சுத்தமாக கை மற்றும் முகத்தைக் கழுவிய பிறகே மீண்டும் ஊருக்குள் வர வேண்டும் என அறிவித்துள்ளேன். இதற்காக ஊர் நுழைவாயிலில் தற்காலிமாக தண்ணீர்க் குழாய் அமைத்து கிருமி நாசினி லிக்விட் மற்றும் சோப் வைக்கப்பட்டு வசதிகளைச் செய்திருக்கிறோம்.

அதே இடத்தில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களுடன் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளேன். மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்ல விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. ஊர் மக்கள் அனைவரும் இதைப் பின்பற்ற தொடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார். கொரோனா தடுப்பு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துவரும் ஊராட்சி மன்ற தலைவர் ரகுமத்துல்லாவை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருவதுடன் இதை முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments