ஊரடங்கு உத்தரவு சமயத்தில் அவசிய தேவைக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல உதவி கட்டுப்பாட்டு அறை - காவல் துறை அறிவிப்பு.!



சென்னையில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் இறப்பு, திருமணம், மருத்துவமனை செல்வது போன்ற அவசர தேவைக்கு வெளியில் செல்பவர்களுக்கு உதவ அவசர உதவி எண்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையில் ஒரு பகுதியாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவசியமின்றி வெளியில் வருவோர்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்நிலையில் காவல்துறை சார்பில் அவசர தேவைக்காக உதவ கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விபரம் வருமாறு:

கரோனா நெருக்கடி காரணமாக, மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒரு தனி கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால், அவர்கள் அவசரகால கட்டுப்பாட்டறை எண். 7530001100-ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது gcpcorona2020@gmail.com. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி கட்டுப்பாட்டறையை கண்காணிக்கபெருநகர சென்னை காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையானது, மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர, சாதாரண தேவைகளுக்கு அல்ல என தெரிவிக்கப்படுகிறது”.

இவ்வாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவி எண்wa.me/917530001100

மின்னஞ்சல் முகவரி - gcpcorona2020@gmail.com
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments