அறந்தாங்கியில் கொரோனாவை காட்டுமாறு அடம்பிடித்த வாலிபர்: சரியாய்க் ‘கொரோனாவை காட்டிய’ அறந்தாங்கி போலீஸார்.!



கொரோனாவை என் கண்ணில் இப்போதே காட்டுங்கள் என்று அடம்பிடித்து, வீட்டுக்குள் அடங்காமல் சாலையில் வீரவசனம் பேசிய வாலிபருக்கு அறந்தாங்கி போலீஸார் அவர்கள் பாணியில் நல்ல ‘காட்டுக் காட்டி’ உள்ளனர். இது தொடர்பான வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது, மீறினால் வழக்குப் பதிவு , வாகனங்கள் பறிமுதலும் நடைபெற்று வருகிறது. இதற்காக காவல்துறையினர் கை எடுத்துக் கும்பிட்டும், உயிரை பணயம் வைத்தும் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலின் தாக்கம் பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லாத சிலபேர் சாலைகளில் வாகனங்களில் ஊர் சுற்றி வருவது வாடிக்கையாகி வருகிறது. அப்படி ஊர் சுற்றித் திரிபவர்களை வீட்டுக்குள் அடங்க வைக்க காவல்துறையினர் படாதபாடுபடுகின்றனர். அப்படி ஒரு வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போலீஸாரிடம் அடம்பிடித்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெகுவேகமாகப் பரவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறந்தாங்கிக்கு வந்துள்ளார். அங்கு பணியிலிருந்த பெண் போலீஸார் அந்த இளைஞரை வீட்டுக்குப் போகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், “நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன் இது என்னுடைய கோட்டை..உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறி, அடம்பிடித்திருக்கிறார்.



மேலும் “யாரும் வரக்கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா நீங்க மட்டும் வெளியே நிக்கிறீங்க. உங்களைக் கொரோனா தாக்காதா?” என்று கேட்க, பெண் போலீஸார், ” சிஎம் தான் அறிவுறுத்தியிருக்காரு. அதைப் போய் சிஎம் கிட்ட கேளு” என்கிறார். அதற்கு அந்த வாலிபர், “சிஎம்ம இங்க வரச்சொல்லுங்கள், இது என் ஊரு, என் கோட்டை. ஓட்டுக்கேட்டு மட்டும் வருகிறாருல்ல, இப்ப வரச்சொல்லுங்கள்” எனக்கூற, அதற்கு பெண் போலீஸ், “நீ ஹெல்மெட் போடலை, மாஸ்க் கட்டாம வந்திருக்கே.. இது சரியா, அதுக்கு மட்டும் பதிலைச் சொல்லு..” என்று கேட்கிறார்.

அதற்கு “என் உசுரு என் கையில், உங்களுக்குக் கொரோனா வந்திருச்சுன்னு என்னால எடிட் பண்ணி அனுப்ப முடியும்” என்கிறார் அந்த அடங்காத வாலிபர். மேலும் “கொரோனாவைக் கண்ணில் காட்டுங்க” என்றும் பெண் போலீஸாரிடம் வாலிபர் தொடர்ந்து கேட்டு திமிர்த்தனம் காட்டும் காட்சிகள் முதல் வீடியோவில் பதிவாகி உள்ளது.அதன்பின்பு அங்கு வந்த எஸ்.ஐ ஸ்டேஷனில் வைத்து பேசுவதற்கு அழைத்துச் சென்று போலீஸ் பாணியில் பேசி இருக்கின்றனர்.


அதன்பின்பு “வீட்டை விட்டு இனி வெளியே வருவீயா?’ என்று அந்த இளைஞரிடம் கேட்க, `சத்தியமா இனி வரமாட்டேன்’ என்று கூறுகிறார். இதை இரண்டு வீடியோவாக எடுத்து அறந்தாங்கி போலீஸார் வெளியிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இரண்டாவது வீடியோவில், அறந்தாங்கி எஸ்.ஐ., “வீட்டுக்குப் போங்கன்னு முதலமைச்சர் வந்து சொன்னாதான் கேட்பீங்களா? அறந்தாங்கிக்கு எதுக்கு வந்தாய்?, பெரிய சைன்டிஸ்ட்டாடா நீ? உனக்கு கொரோனாவைக் கண்ணுல காட்டணுமா? கண்ணுக்குத் தெரியாதது தாண்டா நுண்ணுயிரி., அத உனக்கு கண்ணுல காட்டணுமா, படிச்சிருக்கியா? உயிரைப் பணையம் வச்சு டாக்டர்ங்க, போலீஸ்காரங்க வேலைபார்த்துக்கிட்டு இருக்கோம். நீ சட்டம் பேசுக்கிட்டு இருக்க, இனிமே சட்டம் பேசுவியா? என்று லத்தியில் அந்த இளைஞனின் கையில் அடிக்கிறார். உடனே, அந்த வாலிபர் ” நான் சட்டம் பேச மாட்டேன்..மாட்டேன். மாஸ்க் போட்டுப் பாதுகாப்பாக இருப்பேன். வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன்” என்று போலீஸாரிடம் இரண்டு கைகளை நீட்டி கெஞ்சுகிறார்.

கொரோனாவின் தாக்கம் புரியாமல் வீட்டுக்குள் அடங்காமல் வீதியில் வந்து வீர வசனம் பேசும் சிலருக்கு இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் கட்டாயம் பாடம் புகட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments