கொரோனா எதிரொலி: பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்.!புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள பஸ்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.


பின்னர் அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்களில் கிருமி நாசினி அடிக்கும் பணிகளை பார்வையிட்டு, ஓட்டுனர்கள் மற்றும் கண்டெக்டர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. பயணிகளுக்கும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 9 போக்குவரத்து பணிமனைகளின் மூலம் 437 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தினமும் சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் போக்குவரத்து பணிமனைக்கு வரும் அனைத்து பஸ்களுக்கும் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தவறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இதே போன்று தனியார் பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பஸ் நிலையங்களிலும் ஓட்டுனர்கள் மற்றும் கண்டெக்டர்கள் கைகழுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதுடன், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கம், வணிக வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் தன் சுத்தம் பேணி கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுகாதாரத்துறை மற்றும் போலீஸ் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடக்கூடிய அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்த்து பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

 பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட யாருக்கேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் சுயவைத்தியம் எடுத்துக்கொள்ள கூடாது. அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பொது மக்கள் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்று கூறினார். 

இந்த ஆய்வின் போது அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், பொது சுகாதார துணை இயக்குனர் அர்ஜூன்குமார், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments