`கடனை வாங்கி சொத்து சேர்க்கிறியா?' - காரைக்குடியில் அரசு ஊழியருக்குக் கந்துவட்டி கும்பலால் நேர்ந்த கொடுமை.!நீண்ட நாள்களாக வாங்கிய பணத்தைத் திருப்பி செலுத்தாததால் இந்தியன் பேக்கரி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அவரைக் கடத்தி ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீட்டில் கட்டி வைத்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.


கடனைத் திருப்பித் தராததால் அரசுப் பேருந்து ஓட்டுநரை கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோ, சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சுப்பிரமணியபுரம் 5-வது தெருவில் வசித்துவருகிறார் ஜானகிராமன். இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரைக் கிளையில் ஓட்டுநராக நீண்ட வருடங்களாக பணி செய்து வருகிறார்.

அரசுப் பணியில் இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த இந்தியன் பேக்கரி உரிமையாளர் ராஜா மற்றும் கார்த்திக் என்பவர்களிடம் முறையே ரூ.17 லட்சம் மற்றும் ரூ.4.5 லட்சம் என மொத்தம் 21.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாததால் இந்தியன் பேக்கரி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அவரைக் கடத்தி ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீட்டில் கட்டி வைத்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

அதை அவரும் அவருடைய கூட்டாளியும் வீடியோ எடுத்து மற்ற நபர்களுக்கும் அனுப்பி மிரட்டியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தகாத வார்த்தைகளில் திட்டியபடி ஜானகிராமனின் கழுத்தில் காலை வைத்து `நான் இந்தியன் பேக்கரி ராஜா. என்னையே ஏமாற்றப் பார்க்கிறியா. பணத்தை வாங்கிட்டுப் பல இடங்கள்ல சொத்து சேர்க்கிறியா...

உன் வீட்டில் உள்ளவர்களின் நகையை வித்துக் காசு கொடு'' என்று மிரட்டியுள்ளனர். மேலும், பணம் வாங்கிய ஜானகிராமனை உள்ளாடைகளுடன் கட்டித் தொங்கவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. `வீடியோவில் உள்ள ராஜா பல்வேறு கட்டப் பஞ்சாயத்து, சாதிமத தூண்டுதல்களால் பலமுறை சிறைக்குச் சென்றவர், நகராட்சி ஒப்பந்தங்களையும் பேக்கரி உள்ளிட்ட சில தொழில்களையும் செய்து வருகிறார்' என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.

இதுகுறித்து காரைக்குடி டி.எஸ்.பி அருணிடம் பேசினோம். ``ராஜா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் சொந்த ஊர் ராமநாதபுரம் என்பதால் அவரைத் தேடி தனிப்படை சென்றுள்ளது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜா மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம்" என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments