அதிராம்பட்டினம் பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறாது.! அதிரை ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு.!



அதிராம்பட்டினத்தின் அனைத்து ஜமாத்தார்கள் அவரவர் வீடுகளில் 5 வேளை ஜமாத் தொழுகையை தொழுதுகொள்ள அதிரை ஜமாஅத்துல் உலமா சபை இன்று (25-03-2020) புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (25-03-2020) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;

உலகில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை நாம் அறிவோம். நோயின் வீரியம் அதிகமாகி வருவதைக் கருத்தில் கொண்டு, நம்மால் இயன்றளவு நம்மை நாம் தற்காத்துக்கொள்ள மார்க்கம் நமக்கு வழிகாட்டி இருப்பதன் அடிப்படையில், மறு அறிவிப்பு வரும் வரை பின்வரும் விசயங்களில் பேணவேண்டும்.

1] 5-வேளை தொழுகைகளுக்கும் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லப்படும். ஜமாத்தார்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தொழுது கொள்ள வேண்டும்.

2]  வெள்ளிக்கிழமை அன்றும் ஜமாத்தார்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் லுஹர் தொழுகையை தொழுதுகொள்ள வேண்டும்.

3] அவசிய தேவையின்றி வீடுகளிலிருந்து வெளியே வராமல் இருக்கும் படியும், இந்த சூழ்நிலை வெகுவிரைவில் மாறுவதற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதுடன் மற்ற நல் அமல்களில் ஈடுபடுமாறு ஜமாத்தார்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு மற்றும் அதிரை அனைத்து ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் தக்வா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன் மற்றும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மாா்ச் 24 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிராம்பட்டினத்தின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை மற்றும் அனைத்து பள்ளிவாசல்களில் 5 வேளை ஜமாத் தொழுகை நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிறைவில், அதிரை உலமாக்கள் சபையை அணுகி அவர்கள் தீர்மானித்து அறிவிக்கும் முடிவை ஏற்றுக்கொண்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments