புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்குவோர் 48 மணி நேரத்துக்கு முன்பாக கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவோர்  48 மணி நேரத்துக்கு முன்பாக கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று  கலெக்டர்  உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இதர நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சமைத்த உணவு வகைகள் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பின்வரும் நடைமுறைகளை தவறாது பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு சமைத்த உணவு வகைகள் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு அதாவது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர்கள், செயல் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு  முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஏழை, எளிய பொதுமக்களுக்கு சமைத்த உணவு வகைகள் வழங்குவதற்கு  முன்பாக  உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலரிடம்  உணவு வழங்கப்படும் இடம், வழங்கப்படும் உணவு மற்றும் வழங்குபவரின் விபரம் ஆகியவற்றினை தெரிவித்து அவரிடமிருந்து  தடையின்மைச்சான்று பெற்ற பின்னர் தான்  உணவினை தேவையானவர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி, காவல் நிலைய எல்லை மற்றும் கிராம பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் உணவு தயாரித்து அந்தந்த பகுதிகளில் மட்டும்  வழங்கிட வேண்டும். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உணவு ஏழை, எளிய பொதுமக்களுக்கு வழங்கப்படக்கூடாது.

உணவு  விநியோகிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக வழங்கிட வேண்டும். இருப்பினும், உணவு  விநியோகிக்க வேண்டிய நேரத்திற்குள்ளாக வழங்கிட தாமதம் ஆகும் பட்சத்தில் முன்னரே சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர்கள்,  செயல் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு  தகவல் தெரிவித்து  உணவு  வழங்கிட கூடுதலாக  ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அனுமதி  பெற்றுக்கொள்ளலாம்.

ஏழை, எளிய பொதுமக்களுக்கு உணவு  விநியோகிக்க முன்னதாக விநியோகிக்கும் இடமானது  சுகாதாரமனதாகவும், பாதுகாப்பானதாகவும்  உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.  உணவு  வழங்கக்கூடிய இடத்தில் ஓழுங்குபடுத்த காவல் துறையினர் நிறுத்தப்பட வேண்டும்.  உணவு  வழங்கக்கூடிய இடத்தில் வாகன ஓட்டுநர், உணவு வழங்கிட ஏற்பாடு செய்த        3 நபர்கள் மற்றும் உணவு வழங்கப்பட உள்ள இடத்தை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்;ட பிரதநிதி  ஆகிய மூன்று நபர்களைத்தவிர வேறு நபர்கள் யாரும் இருக்க கூடாது.

உணவு ஏற்றி செல்லும் வாகனத்தில்  மேற்கூறிய மூன்று நபர்களைத்தவிர வேறு நபர்கள் வாகனத்தில் பயணிக்க கூடாது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால்  அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட  கொரோனா தொற்று நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இதர நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சமைத்த உணவு வகைகள் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குமிடத்தில் சமூக இடைவெளியினை  கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும்.

மேற்காணும்  நடைமுறைகளை கடைப்பிடிக்காத மற்றும்  மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments