கட்டுமாவடி பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் குறைந்த விலைக்கு விற்பனையாகும் மீன்கள்.! அனுமதி கிடைத்தும், நஷ்டமடைவதால் மீனவர்கள் ஏமாற்றம்.!



வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் குறைந்த விலைக்கு மீன்கள் விற்பனையாகிறது. அனுமதி கிடைத்தும், நஷ்டமடைவதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தடை உத்தரவால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் மத்திய அரசு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவும், பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்யவும் இருந்த தடையை நீக்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி தொடங்கி ஏனாதி வரை உள்ள 30 மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், கடந்த திங்கட்கிழமை முதல், வாரத்தில் 3 நாட்கள் மீன்பிடிக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மீன்வளத்துறை அனுமதி அளித்தது.

இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சுமார் 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று மீன்பிடித்து விட்டு கொண்டு வரும் மீன்களை மீனவர்கள் மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்கெட்டுகளுக்கு கொண்டு செல்வார்கள்.

அங்கு வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை ஏலம் எடுத்து செல்வார்கள். தற்போது மீன் ஏலக்கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாவட்ட வியாபாரிகளும், மீன்களை வாங்க கடற்கரை பகுதிக்கு வரமுடியவில்லை. இதனால் மீன்களை பிடித்துவரும் மீனவர்கள் கடற்கரை பகுதிக்கு வரும் சிறு வியாபாரிகளிடம் மிகவும் குறைந்த விலைக்கு மீன்களை விற்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

லாபம் பெற முடியவில்லை

இதுகுறித்து மணமேல்குடி பொன்னகரம் மீனவர் சந்திரன் கூறுகையில், நாங்கள் மீன்வளத்துறை அனுமதியோடு வாரத்தில் 3 நாட்கள் கடலில் மீன்பிடிக்க செல்கின்றோம். தற்போது கடலில் நிறைய மீன்கள் கிடைக்கிறது. பிடித்து வரும் மீன்களை வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து வாங்கினால் தகுந்த லாபம் கிடைக்கும். மேலும் மீன்களை ஏலக்கடை மூலம் விற்க வேண்டும். ஆனால் அரசு அதற்கு தடை விதித்துள்ளது. சிறு வியாபாரிகள் வாங்கும் மீன்கள் குறைந்த விலைக்கே செல்கின்றது. மேலும் காவல்துறைக்கு பயந்து சில வியாபாரிகள் மீன்வாங்க வரமறுக்கின்றனர்.

மேலும் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ் கம்பெனிகள் செயல்படவில்லை. கிலோ ரூ.400-க்கு விற்ற மீன்கள் தற்போது கிலோ ரூ.200-க்கும், இதேபோல் நண்டு, இறால் வகைகளும் கிலோ ரூ.450-க்கு விற்றது தற்போது கிலோ ரூ.250-க்கு விற்பனையாகிறது. டீசல், ஆள்கூலி ஆகியவற்றை வைத்து கணக்கிட்டால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த கொரோனா வைரசால் ஏற்கெனவே 20 நாட்கள் வேலையில்லாமல் இருந்தோம். இப்போது கடலுக்கு மீன்பிடிக்க அரசு அனுமதி கொடுத்தும் தகுந்த லாபம் பெறமுடியவில்லை. எனவே அரசு வெளிமாவட்ட வியாபாரிகள் உரிய அனுமதியோடு மீன் ஏலம் எடுக்க அனுமதிக்க வேண்டும். மேலும் கடற்கரை பகுதியில் உள்ள மீன் மார்கெட்டுகள் சமூக விலகலை பின்பற்றி மீன் விற்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments