கீழக்கரை முதியவர் கொரோனாவால் மரணம்: ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை தேவை: நவாஸ்கனி எம்பி வலியுறுத்தல்.!



அலட்சியமாக செயல்படும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ்கனி எம்பி தெரிவித்துள்ளார்.


இது குறித்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா நோய் தொற்று முடிவு அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தாலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியத்தாலும் தற்போது பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் துபாயிலிருந்து வந்த கீழக்கரையை சேர்ந்த சென்னையில் வசிக்கும் 70 வயதுடைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது வீட்டில் அரசு சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.

அவர் கடந்த ஏப்ரல் 2 அன்று காலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் வரும் முன்பே அன்று மாலையே அவர் உயிரிழந்துவிட்டார்.

ஆனால் நேற்று இரவு வரை முடிவுகள் வராதது மிகப்பெரிய கால தாமதம். அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற அறிவிப்பை அரசு காலதாமதமாக இன்று வெளியிட்டிருக்கிறது.

சந்தேகிக்கப்பட்டு பரிசோதனையில் இருக்கும் ஒருவர் இறந்த நிலையில் முடிவு வருவதற்கு முன்பே, தற்போது நோய்தொற்று உறுதியாகி உள்ள சூழ்நிலையில் அவரது இறுதி நல்லடக்கத்தில் உடல்நலக்குறைவால் இறந்தவர் என்று யதார்த்தமாக பங்கேற்ற அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அனைவரும் தற்போது பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த முடிவினை உடனடியாக அறிவித்திருந்தால் இது போன்ற அச்சம் ஏற்பட்டிருக்காது அல்லது முடிவு வர தாமதமாகும் பட்சத்தில் இறந்தவர்களின் உடலை பாதுகாத்து முடிவு வந்ததற்கு பிறகு ஒப்படைத்து இருக்க வேண்டும்.

அப்படி செய்து இருந்தால் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி அவரின் உடல் அடக்கம் செய்யப் பட்டிருக்கும். இறுதி அஞ்சலியில் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்து இருப்பார்கள். அதனை செய்யாமல், மிகுந்த அலட்சியப் போக்குடன் இந்த பேரிடர் காலகட்டத்தில் மெத்தனமாக செயல்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பெரும் தவறை நிகழ்த்தி விட்டார்கள்.

கொரோனா நோய்தொற்று விஷயத்தில் உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கும் பொழுது மெத்தனப் போக்குடன் செயல்படும் ஸ்டான்லி மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நோய் தொற்று பரிசோதனை முடிவுகளை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும்.

பொதுவாக இந்த பரிசோதனைகளில் போதுமான வெளிப்படைத்தன்மை இல்லாததாக பொதுமக்கள் அச்சம் கொள்கின்றார்கள். கொரோனா நோய்தொற்று பரிசோதனையில் காலதாமதத்தை தவிர்த்து, வெளிப்படைத் தன்மையுடன் அரசு நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பரிசோதனையில் இருக்கும் நபர் இறந்து விட்டால் முடிவுகளை உடனடியாக அறிவித்த பின்பே அவரது உடலை ஒப்படைக்க வேண்டும். இது மிகப்பெரிய அலட்சியம்.

இந்த அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் இதற்காக நாம் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக செயல்பட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments