முஸ்லிம்களின் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்.!சாதி, மத பாகுபாடின்றி மக்கள் அனைவரும் சமய நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் தமிழகத்திலே தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சில சமூக விரோதிகள் செயல்படுகிறார்கள்.


தமிழகத்தில் கொரோனா நோய் அதிகரித்து வரும் இவ்வேளையில் இதற்கும் முஸ்லிம்கள் தான் காரணம் என்பது போல சித்தரித்து பொதுச் சமூகத்திலிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் அநாகரீக வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்கள்.

கொரோனா ஒன்றும் மதம் பார்த்து தொற்றிக் கொள்ளும் நோய்க்கிருமியல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள யாரையும் எளிதில் தொற்றிக் கொள்ளும் கொடிய நோய்க்கிருமியாகும்.


நாட்டில் எவ்வித கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்படாத சாதாரண சூழலில் டெல்லி சென்று வந்த முஸ்லிம்களில் சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதை குறிப்பிட்ட சில மீடியாக்கள் மிகைப்படுத்தி சொல்லியதன் விளைவாக இன்று முஸ்லிம்கள் என்றாலே பிறர் அச்சப்படும் சூழலை உருவாக்கி வருகின்றார்கள்.

சமூக விரோதிகள் சிலர் இதை மதப்பிரச்சனையாக உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் திட்டமிட்டு நோயை பரப்புவதாகவும் இதற்கு பயோ ஜிஹாத்- கொரோனா ஜிஹாத் என்றெல்லாம் வாய்க்கு வந்ததை மக்கள் மத்தியில் பரப்பி முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்புணர்வை உண்டாக்க முயற்சிக்கின்றனர்.

சீனப்பயணிகள் மூலம் இந்த வைரஸ் பரவிய போது பௌத்த மதத்துடன் பார்க்கப்படவில்லை. 

ஜெர்மன், இத்தாலி, அமெரிக்க பயணிகள் மூலம் இந்த வைரஸ் பரவிய போது கிறித்தவ மதச்சாயம் பூசப்படவில்லை.

அப்போதெல்லாம் மதச்சாயம் பூசப்படாத வைரஸூக்கு இந்தியா – தமிழகத்திற்கு வரும் போது மட்டும் இஸ்லாமிய வண்ணம் பூசப்படுவது அவமானகரமானது.

ஒரு சமூகத்தின் மீது திட்டமிட்டு வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் இத்தகைய சூழலில் தமிழக அரசும் சுகாதாரத்துறையும் மௌனமாக இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

கொரோனா வைரஸ் வந்து விடக் கூடாது என்பதில் தமிழக அரசு எப்படி முனைப்பாக இருக்கின்றதோ, அதனைப் போலவே அது குறித்த வதந்திகளையும் கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்குரியதாகும்.

இன்று மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் சங் பரிவார கூட்டம் கலவரம் செய்ய திட்டமிட்டே இந்த புதிய ஆயுதத்தை எடுத்துள்ளார்கள், என்பதனை தமிழக அரசு உணரவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. கொரோனா பாதிப்பை விட மிக மோசமான விளைவு இவர்களால் உருவாகும் என்பதனை அரசு உணர வேண்டும்.

கேரள அரசு இது போன்ற விஷம பிரச்சாரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

நோய்க்கிருமிக்கு மதச்சாயம் பூசாதீர் - அதை மீறி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments