கொரோனா எதிரொலி.. மீன் மார்க்கெட்டாக மாறிய புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம்.!



சமூக இடைவெளியை கடைபிடிக்க புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் மீன் மார்க்கெட்டாக மாற்றப்பட்டு உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் 2.30 மணி வரை காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் அதிக அளவு கூடி வருகின்றனர்.

குறிப்பாக புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை, அருகே உள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிகளவு கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் மத்தியில் சமூக இடைவெளியை ஏற்படுத்த கடந்த வாரத்தில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் தற்காலிக உழவர்சந்தை அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவு கூடி வந்தனர்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மீன் மார்க்கெட் பகுதியில் போதுமான இடவசதி இல்லாததால் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை எனக்கருதி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு மீன் மார்க்கெட்டை தற்போது மாற்றி உள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களுக்குத் தேவையான மீன், நண்டு, இறால் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், 100-க்கும் மேற்பட்ட பஸ்களும் நிற்காமல் சென்று கொண்டிருந்த புதிய பஸ் நிலையத்தை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற மீன் மார்க்கெட்டாக மாவட்ட நிர்வாகம் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments