நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் அருந்தலாம்: தமிழக அரசு.!



கரோனா தடுப்பில் இந்திய மரபு முறை மருத்துவம் பற்றி மருத்துவ வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக்குப் பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க "ஆரோக்கியம்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீரை மக்கள் குடிக்கலாம். சிகிச்சை பெற்ற பின் மக்கள் உடல் நலத்தைப் பேணவும் நிலவேம்பு, கபசுர குடிநீரைக் குடிக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மட்டுமே நிலவேம்பு, கபசுர குடிநீர் உதவும், கரோனா சிகிச்சைக்கு அல்ல. சென்னையில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும். 

கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் (containment zone) ஒரு லட்சம் கபசுர குடிநீர் பொட்டலம் தரப்படும். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு "ஆரோக்கியம்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்க ஆரோக்கியம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்பு தலைமைச் செயலக ஊழியர்கள், போலீசாருக்கு நிலவேம்பு, கபசுர குடிநீரை முதல்வர் வழங்கினார்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments