புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் இருந்தால் உதவத் தயார் : மாவட்ட ஆட்சியர்.!விவசாயிகளின் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதில் சிரமம் இருந்தால் உதவத் தயாராக இருப்பதாக புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு கிராமத்தில் விவசாயிகளின் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையினை  மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் வடகாடு கிராமத்தில் விவசாயிகளின் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பலா, வாழை, தர்பூசணி மற்றும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யும் வகையில் வேளாண்துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பணியானது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, விவசாயிகளுக்கு வேண்டிய வழிகாட்டுதலை வழங்குமாறு மேற்கண்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள் விற்பனையை எளிதாக்குவதற்கு, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படும் நேரடி விற்பனை மையங்கள் மற்றும் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக நடமாடும் காய்கனி விற்பனை நிலையங்களை இயக்கவும், நுகர்வோருக்கு அவர்களுக்கு அருகிலேயே நேரடியாக நியாயமான விலையில் வழங்குவதற்கும் தமிழ்நாடுஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 797 ஹெக்டர் பரப்பில் பழங்களும், 1 ஆயிரத்து 523 ஹெக்டர் பரப்பளவில் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது பெரும்பாலான காய்கறிகளும், பழங்களும் அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இச்சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது தோட்டக்கலைதுணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்பொழுது கந்தர்வக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, கறம்பக்குடி, ஆலங்குடி ஆகிய இடங்களில் தலா 1 உழவர்சந்தையும், புதுக்கோட்டையில் 2 உழவர்சந்தைகளும் என ஆக மொத்தம் 7 உழவர்சந்தைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர வேளாண்மை, கூட்டுறவு, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 100 க்கும் மேற்பட்ட நடமாடும் காய்கறி வாகனங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் வேளாண்துறையின் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும், இலுப்பூரில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் இக்கிடங்கில் தங்களது விளைபொருட்களை இருப்பு வைக்க எண்ணினால்  ஏப்ரல்-30 வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் இருப்பு வைத்து பயன்பெறலாம்.

இதுதவிர ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,850 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்கில் விளைபொருட்களை அடமானத்தின் பெயரில் அதிகபட்சம் 75 சதவீத சந்தை மதிப்பு அல்லது ரூ.3 லட்சம் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டு கடன் பெறலாம். கடனுக்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கு 5 சதவீத வட்டி இதில் முதல் 30 நாட்களுக்கு வட்டி செலுத்த தேவையில்லை.

மேலும் வேளாண்துறையின் மூலம் நடமாடும் வேளாண்மை விரிவாக்க மையம், நடமாடும் உரவிற்பனை மையம், விராலிமலை, ஆவுடையார்கோவில் மற்றும் திருவரங்குளம் ஆகிய வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அருணாசலம், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments