தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!



தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் மத்திய அரசு அதை ஏப். 15 காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், காணொலிக் காட்சி மூலமாக ஏப்ரல் 11 அன்று முதல்வர்களுடன் பிரதமர் விவாதித்தார்.

இந்தக் கலந்தாய்வின்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என எடுத்துரைத்ததுடன், ஏப். 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். மற்ற முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பிரதமரின் கலந்தாய்வுக் கூட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், ஏப். 11 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

கட்டடத் தொழிலாளர்கள் உள்பட பதிவுபெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள் (பேக்கரி) இயங்க தடையில்லை என்பதையும், ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவுபடுத்தப்படுகிறது.

மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள டெலி மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments