திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.!திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸ் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுதர்சன். இவர் திருமயத்தில் பணியாற்றிய போது, வாட்ஸ்-அப் குழு ஒன்றை தொடங்கி அதற்கு திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் என பெயரிட்டு அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி உடற்பயிற்சி அளித்து வந்தார்.

இதனிடையே சுதர்சனுக்கு நிர்வாக ரீதியாக கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் அளித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை அறிந்த திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், சுதர்சனை பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

சுதர்சன் ஏற்கனவே திருமயம் போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி விட்டதால், அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று திருமயத்தை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் 30 பேர், திருமயம் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுதர்சன் இடமாற்றத்தை கைவிட வேண்டி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லுமாறு கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் ஊரடங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments