தஞ்சையில் `கோயில் அர்ச்சகர்களுக்கு உதவிக் கரம் நீட்டிய இஸ்லாமியர்கள்.!’கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒன்றாகத் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் உள்ள கோயில்களும் அடைக்கப்பட்டுள்ளதால் கோயில் அர்ச்சகர்கள் வருமானம் ஏதுமின்றி உள்ளதால் இஸ்லாமிய அமைப்பு சார்பில் சிறிய கோயில் அர்ச்சகர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பெரும்பாலானவர்கள் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். கஷ்டத்தில் இருப்பவர்களின் துயரைத் துடைக்கும் வகையில் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை நேசக்கரம் நீட்டி செய்து வருகின்றனர்.

இதேபோல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவது இல்லை. இதனால் சிறிய கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் வருமானம் ஏதுமின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.


இந்நிலையில், தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி ரசா ஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் வடக்கு வீதி விநாயகர் கோயிலில் அப்பகுதியில் உள்ள 15 இந்துக் கோயில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.800 மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. இது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாகி சையது முதஹர் கூறுகையில், ``எங்களது அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். இதேபோல் கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிபவர்கள் வேலையிழந்து இருப்பதால், தற்போது அவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். இந்தச் செயல் மனிதர்கள் சாதி, மதம் ஏதும் பாராமல் எல்லோரும் ஒற்றுமையோடு இருப்பதைக் காட்டுகிறது. எங்களுக்கு இதில் மனநிறைவு ஏற்பட்டது’’ என்றார்.

நன்றி: விகடன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments