பெரம்பலூரில் மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் ஆலம்பாடி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்துல்ரசாக். இவருடைய மனைவி சாராம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள். இதில் 4-வது மகன் சதாம் உசேன் (வயது 19). அப்துல்ரசாக் ஏற்கனவே இறந்து விட்டார். சதாம் உசேன் பெரம்பலூரில் உள்ள கான்கிரீட் கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உடையவரான சதாம் உசேன் ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது கிடைக்காமல் திண்டாடி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், சதாம் உசேன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு இரவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை சாராம்மாள் திட்டி, கண்டித்துள்ளார்.
இதையடுத்து கோபத்துடன் சதாம் உசேன் வீட்டை விட்டு வெளியே சென்றார். சாராம்மாள் பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது மீண்டும் சதாம் உசேன் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் சாராம்மாள் தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, வீட்டின் ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் சாராம்மாளின் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் சதாம் உசேன் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சாராம்மாள் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சதாம் உசேனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சதாம் உசேன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments