வீட்டிலேயே கபசுர குடிநீர் தயாரிப்பது எப்படி?



மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியிருந்தது.


இதையடுத்து ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரண பொட்டலங்கள் வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


இதன் தொடர்ச்சியாக கபசுர குடிநீருக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனை இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்துசெய் நிலையம் மற்றும் பண்டக சாலை (இம்ப்காப்ஸ்) நிறுவனத்தின் கடைகளுக்கும், நகரில் உள்ள நாட்டுமருந்து கடைகளுக்கும் பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். சிலர் நாட்டு மருந்து கடைகளில் மூலிகைகளை வாங்கி, வீட்டிலேயே தயாரிக்க நினைக்கிறார்கள். ஆனால் அதனை எந்த பக்குவத்தில் செய்யவேண்டும் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இந்தநிலையில் கபசுர குடிநீர் எவ்வாறு வீட்டிலேயே தயாரிக்கவேண்டும் என்பது குறித்து இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர் கரு. கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:-

சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக் சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்து, முறைப்படி சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக இடித்து, நன்கு கலந்து வைக்கவேண்டும்.

35 குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி, பன்னிரண்டில் ஒன்றாய் குறுக்கி வடிகட்டி, குடிநீர் (250 மி.லி. அளவுக்கு) எடுக்கவேண்டும். 30 முதல் 60 மி.லி. வீதம், தினமும் 2 அல்லது 3 வேளைகள் கொடுக்கலாம். துணை மருந்தாக சாந்த சந்திரோதய மாத்திரை, கோரோசனை மாத்திரையும் கொடுக்கலாம். இதன் மூலம் கபசுரம் தீரும்.

காய்ச்சி வடிகட்டவேண்டும்

நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணத்தை இரண்டு தேக்கரண்டி (10 கிராம்) வீதம் எடுத்துக்கொண்டு 200 மி.லி. அளவு தண்ணீரில் இந்த குடிநீர் சூரணத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக வரும் வரை காய்ச்சி வடிகட்டி கசாயத்தை எடுத்துக்கொள்ளவும். 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மி.லி., 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி., 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 50 மி.லி. மட்டும் கொடுக்கவேண்டும்.

தற்காப்புக்காக 3 முதல் 5 நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 வேளை முதல் 3 வேளை வரை பருகலாம். நோய் வந்த பின்னர் டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும். வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. ஏதேனும் நோய் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி உணவு உண்ணுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அருந்தலாம்.

யார் குடிக்கக்கூடாது?

குடிநீரை அப்போதைக்கு அப்போது மட்டும் புதிதாக செய்து பயன்படுத்தவேண்டும். குடிநீரை 3 மணி நேரத்துக்கு பின் பயன்படுத்தக்கூடாது. 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் முதல் 3 மாதங்களுக்கு குடிக்காமல் இருப்பது நல்லது. வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே குடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments