மதுரை அருகே குடிபோதையில் தந்தை தகராறு; தீக்குளித்த கல்லூரி மாணவி.!குடிபோதையில் தந்தை தகராறு செய்ததால் மன வேதனை அடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்தார். காப்பாற்ற சென்ற அவருடைய தாயும் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமரன் (வயது 43), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி பரமேஸ்வரி (40). கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

ஊரடங்கால் கட்டிட வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த சிவக்குமரன் நேற்று டாஸ்மாக் கடை திறந்ததை தொடர்ந்து மது வாங்கி குடித்தார். குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

தனது தந்தையும், தாயும் சண்டை போடுவதை பார்த்து மனம் உடைந்த அவர்களது மகள் அர்ச்சனா (18) தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் பரமேஸ்வரி மகள் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினார்.

இதில் அவரது உடலிலும் தீ பரவியது. பின்னர் சிவக்குமரனும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து தீயை அணைத்து அவர்கள் இருவரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அர்ச்சனா மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மதுவால் தகராறு ஏற்பட்டு நடந்த இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments