வெளிநாட்டு விமானங்களுக்கு சென்னைக்கு பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு.!“வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் தமிழகம் வரும் விமானங்கள், சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.


வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் தமிழகம் வரவிருப்பதால் இனி, சென்னைக்குப் பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக “வந்தே பாரத் மிஷன்” இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

முதல் கட்டமாக 11 விமானங்கள் தமிழ்நாட்டிற்கும், அதில் ஒன்பது விமானங்கள் சென்னைக்கு வந்தடைந்தன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 1,691 பயணிகள், சென்னை விமான நிலையத்தின் வாயிலாக தமிழகம் வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, இரண்டாம் கட்ட வந்தே பாரத் மிஷன் இயக்கத்தில், சில சர்வேதேச விமானங்களை திருச்சியில் தரையிறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

வந்தே பாரத் மூலம் இந்தியா வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்களுக்கு கட்டாயமாக அமைப்பு ரீதியாகத் தனிமைப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே, சென்னைப் பெருநகரம் கொரோனா தொற்றால் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. இதனால், அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தனிமைப்படுத்தும் வசதியை சென்னையில் ஏற்படுத்துவது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பொருட்டு, திருச்சியிலும் அதனை சுற்றியுள்ள கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் குறைந்தது 15,000 பயணிகள் தங்கும் தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்பாடு செய்யும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “வெளிநாடுகளில் இருந்து  வரும் பயணிகள் அனைவருக்கும் சுகாதாரத் துறையின் குழுவினரால் காய்ச்சல் உள்ளதா என்றும், கோவிட் நோய் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் தெரிகின்றனவா என்று சோதிக்கப்படும்.  விமான நிலைய வருகைக் கூடத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ஒவ்வொரு பயணியிடமிருந்தும் மாதிரிகளும் எடுக்கப்படும். 

பின்னர், பயணிகள் .தாங்கள் தேர்வு செய்து கொண்ட, தனிமைப்படுத்தும் வசதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கென மாநில அரசால் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments