புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் 71% நிறைவு - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல்.!புதுக்கோட்டையில் சிறப்பு தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணிகளுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா மற்றும் மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் இன்று நாகுடி பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க சிறப்பு தூர்வாரும் பணியினை கண்காணிக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆள்இல்லா சிறு விமானம் மூலம் அளவீடு செய்யும் தொழில்நுட்பக் கருவியின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணிகளுக்கான புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு தூர்வாரும் பணிகள் என்ற உன்னத திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான சிறப்பு தூர்வாரும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.


இதன்படி நாகுடி பகுதியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் இன்றைய தினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணியில் கல்லணை கால்வாய் கோட்டம் மற்றும் அக்னியாறு கோட்டங்களின் மூலம் மொத்தம் 9 பணிகள் ரூ.174 லட்சம் மதிப்பீட்டில் 94.230 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதில் கல்லணை கால்வாய் கோட்டத்தில் 89.83 கி.மீ நீளத்திற்கு ரூ.109 லட்சம் மதிப்பீட்டில் 7 பணிகளும், அக்னியாறு கோட்டத்தில் 4.40கி.மீ நீளத்திற்கு ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளில் தற்பொழுது 64.395 கி.மீ நீளத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 29.835 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் 71 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கேமரா பொருத்தப்பட்ட ஆள்இல்லா சிறுவிமானம் மூலம் அளவீடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆள்இல்லா சிறு விமானம் மூலம் அளவீடு செய்யும் தொழில்நுட்பம் துல்லியமாக அமைந்துள்ளதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இம்முறையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். 

அந்த வகையில் தூர்வாரும் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஆள்இல்லா சிறு விமானத்தில் உள்ள 3டி தொழில்நுட்பத்தின் மூலம் தூர்வாரப்பட்ட பகுதியின் நீளம், அகலம் மற்றும் ஆழம் போன்றவற்றை துல்லியமாக கணக்கிட முடியும். இதே போன்று வெளியேற்றப்பட்ட மண்ணின் அளவையும் கணக்கிட முடியும். 

தூர்வாரி வெளியேற்றப்பட்ட மண்ணை கால்வாய் ஓரம் கொட்டாமல் பிறபகுதிகளில் பாதுகாப்பாக கொட்டி கரையை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பயனாக பாசனத்திற்கு தேவையான நீர் தங்குதடையின்றி வருவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்பு தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணிகளுக்கான புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கல்லணை கால்வாய் செயற்பொறியாளர் முருகேசன், தெற்கு வெள்ளாறு செயற்பொறியாளர் குமார், அக்னியாறு செயற்பொறியாளர் கனிமொழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments