பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் பி.உமாமகேஸ்வரி உத்தரவு.!



பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் பி.உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.


புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் வங்கிகள் மற்றும் அங்காடிகளில் மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:–

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க போர்க்கால அடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்ல தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதியான கீழ ராஜ வீதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் முகக்கவசம் அணிதல் ஆகியவை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக வங்கியின் முகப்பில் வெப்பமாணி கொண்டு வாடிக்கையாளர்களை பரிசோதித்த பின் உள்ளே அனுமதித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு தனிவரிசை முறையை பின்பற்றவும் குளிர்சாதன பயன்பாட்டினை முற்றிலும் நீக்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.

இதே போன்று பழங்கள் மற்றும் பழச்சாறுகள் விற்பனை செய்யும் கடைகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பொது மக்கள் பழங்களை தங்களது கைகளால் தொடாதவாறு அவர்கள் தெரிவிக்கும் பொருட்களை கடை விற்பனையாளர்களே வாடிக்கையாளர்கள் கொண்டு எடுத்து வரும் பைகளில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடைகளில் பணிபுரிபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காலையில் கடையில் நுழைவதற்கு முன் வெப்பமாணி கொண்டு சோதித்த பின்னரே பணி செய்ய அனுமதி வேண்டும் என்பது குறித்தும் கண்டிப்பாக பணியாளர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் அத்தியாவசிய தேவகைளுக்கு மட்டும் பயணம் செய்திடவும் முதியவர்கள் மற்றும் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் பொது போக்குவரத்தை தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது.

பேருந்துகளில் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், உரிய சமூக இடைவௌியை பேருந்துகளில் கடைபிடித்து பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் இத்தகைய சூழ்நிலையை பொது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டு தமிழக அரசால் தெரிவிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். விலைமதிப்பில்லாத மனித உயிர்களை காப்பதற்கு பொது மக்கள் ஒவ்வொரு வரும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments