அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.!



அரிமளத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மற்றும் மதுவிலக்கு மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். 

அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு திருக்கோகர்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோரிக்கை தொடர்பாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்துகளை நீண்ட பட்டியலாக பொதுமக்கள் கொண்டு வந்திருந்தனர்.

மேலும், அரிமளத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளினால் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கூலித்தொழிலாளர்கள் மது குடித்து விட்டு வீட்டிற்கு பணம் கொடுப்பதில்லை எனவும், அதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், எனவே டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனவும், ஆர்ப்பாட்டம் நடத்த முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும், மனு கொடுக்க மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினர். 

அப்போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க கோரி போலீசாருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அறிவுறுத்தினர்.

அதன்பின் ஒரு சில நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments