நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129 வெளிநாட்டு இஸ்லாமியப் பயணிகளுக்கு உதவுங்கள்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்



ஜாமீன் வழங்கப்பட்டும் சட்டவிரோதமாக தமிழகச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியப் பயணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதம்:
'இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மிகப் பயணமாக வந்த 12 பெண்கள் உள்பட 129 இஸ்லாமியர்கள் மீது, தமிழகத்தில் 15 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு முதலில் புழல் சிறையிலும், பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 98 பேருக்கு ஏற்கெனவே நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு சென்னை நகருக்குள் தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை அடிப்படையில் சொந்தப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படிப் பிணை வழங்கப்பட்ட பிறகும் மீண்டும் இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தடுப்பு முகாம்கள் பற்றிய வழிகாட்டுதல்களைக் கவனத்தில் கொள்ளாமலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமலும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள ஹட்ஜ் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் வெவ்வேறு தனியார் இடங்களிலும், ஹைதராபாத்தில் பள்ளிவாசல்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் சம்பந்தப்பட்ட தூதரகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் சிறையில் தடுப்பு முகாம்களின் வழிகாட்டுதல்களுக்கு மாறாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும் அடிப்படை வசதிகளற்று மிக மோசமான சூழலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, ஆன்மிகச் சுற்றுலா வந்தவர்களை வன்மத்துடன் அணுகுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு,
1. உடனடியாக சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
2. இவர்கள் மீதான வழக்கை முடித்து அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
3. அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் வரை, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் தனியார் இடங்களில் அரசின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments