சாத்தான்குளம் துயர சம்பவம்: புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை.!தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என தந்தை, மகன் இருவரும் காவல் துறையால் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் படுகொலை சம்பவத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இதனையடுத்து, ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்த நிலையில், “போலீஸுக்கான அதிகாரங்கள் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு இல்லை” என்று காவல் துறை தரப்பு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் திருச்சி சரக ஐஜி ஆனி விஜயா இன்று (ஜூலை 5), “ ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை சேர்ந்த நபர்களை, காவல் நிலையப் பணி, போக்குவரத்து பணி, ரோந்துப் பணி, வாகன தணிக்கை,கைது நடவடிக்கை உள்ளிட்ட எந்த வேலைக்கும் வைத்து கொள்ள கூடாது” என வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோலவே தமிழகம் முழுவதும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை இரண்டு மாதங்களுக்கு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு காவல் பணிகளில் ஈடுபட தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டதோடு, சமூகப் பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தபடுவார்கள் என்று அறிவித்திருந்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments