ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி தமுமுக முற்றுகை போராட்டம் அறிவிப்பு.!வெளிநாட்டில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லிம்களை விடுவிக்க கோரி 14.7.2020 அன்று போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு இவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிணை வழங்கப்பட்ட நிலையில் இவர்களில் 98 நபர்கள் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தமிழக அரசு இந்த சிறார் சிறையை விசா விதிமுறை மீறல் செய்தவர்களை அடைப்பதற்கான சிறப்பு முகாம் என்று அறிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 12 அன்று 31 வெளிநாட்டவர்களுக்குப் பிணை வழங்கியதுடன் இவர்கள் விசா விதிமுறை மீறலுக்காக போதுமான அளவு தண்டனை அனுபவித்து விட்டார்கள் என்றும் இவர்கள் கொரோனாவை பரப்பவில்லை என்றும் அவர்களது வழக்கை முடித்து அவர்கள் தம் சொந்த நாடுகளுக்குத் திரும்பத் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே வெளிநாட்டு முஸ்லிம்கள் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றார்கள். தமிழகத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களை விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் சார்பிலும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் புழல் சிறையில் உள்ள வெளிநாட்டு முஸ்லிம்கள் அங்கிருந்து ஆரோக்கியமான இடத்திற்கு மாற்ற வேண்டுமென்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் மீதான வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டு அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப வழிவகுக்க வேண்டுமென்று விடுத்த வேண்டுகோளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.

கொரோனா பரவும் புழல் சிறையில் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 30 நபர்கள் தங்கும் வசதி கொண்ட இடத்தில் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வழி வகுக்காமல் 129 பேரை அடைத்து வைத்திருக்கும் நிலையில் தமிழக அரசின் மனிதநேயமற்ற செயலை கண்டித்தும், இவர்கள் அனைவரது வழக்கையும் உடனடியாக முடித்து அவர்களைத் தாயகம் அனுப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும். 

இதர ஊர்களில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் முன்பும் வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை 14 காலை 11 மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெறும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்தும் உலகளாவிய அளவில் தமிழர்களின் விருந்தோம்பல் மாண்பிற்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அநீதிக்கு எதிராக அனைவரும் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments