ஆலங்குடி அருகே விரக்தியில் ஐஸ்கிரீம்களை ரோட்டில் கொட்டிய தொழிலாளி! சிறு தொழில் வியாபரியை பந்தாடும் கொரோனா.!!!



கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஒட்டு மொத்த தொழில்களும், தொழிலாளர்களும் முடங்கி போனார்கள், வாங்கிய கடனை கட்ட வழியில்லை.


அன்றாடம் உணவுக்கே திண்டாடும் உழைக்கும் மக்கள். சின்ன, சின்ன தொழில் செய்த சிறு முதலாளிகள் மற்றவர்களிடம் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இப்படி கொரோனா துயரம் நீண்டு கொண்டே போகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். பல வருடங்களாக ஆலங்குடியில் ஒரு ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்தவர் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் (எல்லாம் கடன்) தனது சொந்த ஊரில் ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரம் அமைத்து ஒரு மாதம் வரை உற்பத்தி செய்து பல வாகனங்கள் மூலம் திருவிழா, போன்ற கூட்டம் கூடும் இடங்களில் விற்பனை செய்து வந்தார். மார்ச் முதலில் மாசிமகம் திருவிழாவில் வியாபாரம் செய்தவர் அதற்குப்பிறகு ஊரடங்கால் வியாபாரம் முடங்கியது.

ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு திருவிழாக்கள் தொடங்கும் என்ற நம்பிக்கையில் சுமார் ரூ. 2 லட்சம் ரூபாய்க்கு உற்பத்தி செய்த ஐஸ் கிரீம்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தார் 4 மாதங்கள் ஓடிவிட்டது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் எந்த விழாக்களுக்கும் அனுமதி இல்லை. அதனால் 4 மாதங்கள் பாதுகாத்து வந்த ஐஸ்கிரீம்களை இனியும் பாதுகாத்து மின்கட்டணம் கட்ட முடியாது என்று சாலையில் கொட்டி அழித்தார்.

இதுகுறித்து செந்தில் கூறும்போது, ரூ. 15 லட்சம் கடன் வாங்கி தொழில் தொடங்கி ஒரு மாதம் தான் முழுமையாக உற்பத்தி செய்தேன், அடுத்த மாதமே ஊரடங்கு. அதனால் கோடையை நம்பி தொழில் தொடங்கிய எங்களுக்கு மொத்தமாக இழப்பு ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிக்கிறார்கள். வட்டியும் கட்ட வழியில்லை கடனும் கட்ட வழியில்லை. தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம்களை பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததால் ரூ. 15 ஆயிரம் மின்கட்டணம் வந்தது. அதை கட்ட கூலி வேலைக்கு சென்று மின்கட்டணம் கட்டிவிட்டேன். 

ஆனால் கடனையும், வட்டியும் கட்ட என்னால் முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். அந்த விரக்தியில்தான் இனியும் மின்கட்டணம் கட்ட வசதி இல்லை என்பதால் இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்த ஐஸ் கிரீம்களை சாலையில் கொட்டி அழித்துவிட்டேன்.

அதனால் என்னை போன்ற பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் செய்பவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன் மறுபடியும் தொழில் செய்ய வங்கி கடன் உதவிகளும் செய்ய வேண்டும் என்றார் வேதனையுடன். கொரோனா நோய் பாதிப்பைவிட அதன் காரணத்தால் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகமாக உள்ளது. எப்போது விடியும்?
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments